பக்கம்:உத்தரகாண்டம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    109


“இந்த ஆளை ஒவ்வொரு நாள் ராத்திரி கழுத்தைப் பிடித்து நெறித்து விட்டு, போலீசில் போயி சரணடைஞ்சிடலாம்னு வருது சின்னக்கா! இந்தப் பொண்ணு, ஆதரவில்லாம வந்திடிச்சே, இதுக்காக நான் உசிரோடிருக்கிறேன்...” என்றழுத குரல் நெஞ்சில் உயிர்க்கிறது. ஒரு வழியாக செத்துத் தொலைந்தான்...

ஒருவேளை, துபாயோ எங்கேயோ போயிருந்த மருமகன் வந்திருப்பானோ?

யார் கண்டார்கள்? ஒருவீடு... பெரிய வீடு... அதற்குப் பங்கு கேட்டு வெட்டுக்குத்துக்குக் கூடத் தயாராவார்கள்!

சட்டென்று, ஒரு நடை ஊருக்குப் போய்ப் பார்த்து விட்டு வரலாமா என்று ஆவல் எழும்புகிறது. இங்கே இவள் எதற்காக, எதைக் கட்டிக் காத்துக் கொண்டு இருக்க வேண்டும்?...

அவள் இந்த எல்லையை விட்டுப் போய் வெகுகாலம் ஆய்விட்டது. அம்மா இறந்தபின் அவள் எந்த இடத்துக்கும் நகரவில்லை. அய்யாவும் கூட, சொந்த பந்தம் என்று சென்று பழகிய தொடர்புகள் என்று மதுரை, சின்ன மங்கலம் போய் வந்திருக்கிறார். பொதுக் கூட்டங்கள், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்குப் போனதில்லை. நட்பும் உறவும், தோழமையும் விட்டுவிடாமல் தாமரையிலைத் தண்ணீர்போல ஒட்டியும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தார். நிக்கொலஸ், சாயபு, பத்மாவதி அம்மா, எல்லாரும் வருவார்கள். பழைய கனவுகளை அந்தக்கால சந்தோசத்துடன் பேசுவார்கள். காந்தி சிந்தனை நடக்கும்.

நிறையப் புத்தகங்கள் வாங்குவார்; படிப்பார். ஆனால் அவரை அரசியலில் ஈடுபடப் பெரியவர்கள் வற்புறுத்தியும் ஈடுபடவில்லை. அவள் மகன் கல்யாணம் எத்தனை ஆரவாரத்துடன் நடந்தது?

அவன் சார்ந்திருந்த அரசியல் கட்சி ஆட்சியைப் பிடித்து விட்டதே? ராதாம்மா விக்ரமுடன் கல்யாணத்துக்கு வந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/111&oldid=1049641" இலிருந்து மீள்விக்கப்பட்டது