பக்கம்:உத்தரகாண்டம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    111

ணும்மா. பொம்புள ஸ்கூல்லதா படிச்சா. இவுரு சினிமா லைன்ல எறங்கினதே தாத்தாக்கு சம்மதமில்ல. விவசாயந்தா பரம்பர பரம்பரையா. கட்சில சேர்ந்ததும், புதுசா இப்படி அகலக்கால் வச்சிருக்காங்க. முதமுதல்ல எடுத்த படம், நூறு நாள் தாண்டிடிச்சின்னதும், தொடர்ந்து இவங்க எலக்சன்ல செயிச்சதும், நல்ல படியா வந்திருக்கு. அந்தக் காலத்துல, எங்க மாமா, நாகபட்டனத்துல நாடகக்காரங்களக் கூப்டு வச்சிட்டு நாடகம் நடத்தி ஏகமாத் தோத்தாரு. நாடகக்காரங்க, சினிமாக்காரங்கன்னாலே குடும்பத்துக்கு ஒதவாதுன்னு நினச்சிட்டிருந்த குடும்பம்... ஏதோ பெரியவங்கல்லாம் பாத்து நடத்திருக்காங்க. எங்காலத்துல, ஒரு ‘உள் பாடி’ போடுறதுக்கு எங்க மாமியா, அப்படிப் பேசுவாங்க!... காலம் மாறிப்போச்சி...”

“நீங்க ஒண்னும் கவலப்படாதீங்க சம்பந்தி அம்மா, தாயம்மா போய் இருந்து, நல்லாக் கவனிச்சிப்பா...”

அவளுக்குத் துணுக்கென்றிருந்தது.

புதிய உறவு, புதிய தொடர்புகளா? இது சாத்தியப்படுமா? அவள் போய் அந்த வீட்டில்... எப்படி?

கல்யாணம் முடிந்ததும் அவர்கள் வீடு திரும்பிவிட்டார்கள். புது வீடு வாங்கி, சம்பிரதாயமாகக் குடும்பம் வைக்க அவள் மகனும், அவள் சம்பந்திகளும் அழைத்துச் செல்ல வந்தார்கள்.

“தாயம்மா, மாட்டேன்னு சொல்லாம போ! நீரடிச்சு நீர் விலகாது. அரசியல் வேற, மனித உறவு வேற. அரசியல்ல அப்பப்ப மாற்றம் வரலாம். வேற வேற வாழ்க்கை முறை வரலாம். மனித உறவுகள், மனித நேயம், அது மாறாமல் இருக்கணும்...”

தன்னுடைய இரண்டு வெள்ளைச்சீலைகளைப் பையில் வைத்துக் கொண்டு அவள் முதன் முதலாக அந்த நிழலை விட்டிறங்கினாள்; மகனுடன் சென்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/113&oldid=1049647" இலிருந்து மீள்விக்கப்பட்டது