பக்கம்:உத்தரகாண்டம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114   ✲   உத்தரகாண்டம்


“மாமா, உங்களுக்கு ஏன் மண்ணாங்கட்டின்னு பேரு?” இதைக் கேட்டவுடன் அவன் சந்தோசம் நிரம்பி வழியச்சிரித்தான்.

“கண்ணு, எங்காயிக்கு முதப் பொறந்த நாலு புள்ள செத்துப் போச்சி. நா... அஞ்சாவது. முதப்பொட்டபுள்ள, குலதெய்வத்து பேரு வச்சாங்க, அங்காயின்னு. சத்துப் போச்சி. ரண்டாவது ஆம்புளப்புள்ள, முனியசாமின்னு பேரு வைக்கணும்னிருந்தாங்க. மூனே நாளுல பூடுத்து. மூணாவது, நாலாவது ரண்டும் பொறந்தவுடனே பூடிச்சாம். அப்ப, எங்காயி நினைச்சிசாம். இது மண்ணாங்கட்டியாக் கெடக்கட்டும்னு நினச்சாங்க. பேரே வய்க்கல. நா... மண்ணாங்கட்டியாவே உருண்டிட்டிருக்கிற...”

அந்த சிரிப்பு, வாழ்க்கையில் தூக்குமரத்துக்குப் போய் விட்டு மீண்டும் வாழ வந்த ராமுண்ணியின் சிரிப்பை நினைவூட்டும். ஒவ்வொரு கணமும் வாழ்வை நேசிப்பவர்கள். வாழ்க்கையில் இழப்புகள், நோவுகள், சித்திரவதைகள், கொடுமைகள், குரூரங்கள், அபாயங்கள் எல்லாம் இருக்கின்றன. இவற்றுக்கு நடுவே, எப்போதும் சிரிக்கும், நிறைவைக் காட்டும், வாழவைக்கும் மண்ணுக்கு நன்றி சொல்லும் உழைப்பாள மனிதர்கள்.

அந்தச் சாத்துக்குடி, ராதாம்மா பம்பாயில் நோவாக இருக்கையில் பூவும் பிஞ்சுமாகக் காய்ந்து, பட்டுப் போயிற்று. அது இன்னதென்று விவரிக்க முடியாத பூமியின் சோகமாகத் தோன்றியது. எலுமிச்சங்காய் அளவு பிஞ்சுகளே ஒராயிரம் இருக்கும்போல தோன்றியது. மண்ணாங்கட்டிதான் பறித்துக் கொண்டு மரத்தை வெட்டிச் சுத்தப்படுத்தினான். அப்போது தான் கோவாலு வந்ததும், மலக்குழி சுத்தம் செய்ததும் நடந்தது.

“யம்மா இந்த சாதி - ஐயிருமாருதி ஒசந்த சாதி. சிப்டிக் டாங்கிதா தீட்டாப்பூடிச்சி...” என்றான்.

இப்போது அவன்தான் உள்ளே வருகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/116&oldid=1049652" இலிருந்து மீள்விக்கப்பட்டது