பக்கம்:உத்தரகாண்டம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10



இந்நூலை அச்சிட்டு வெளியிடும் பதிப்பகம் தமிழகத்தில் பெருமைக்குரியதாகும். இப்பதிப்பகத்தைத் துவங்கிய அமரர் கண. முத்தையா அவர்கள் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்; சிறந்த இலக்கிய அறிஞர்; இந்தப் பதிப்புத் தொழிலின் வாயிலாக, மொழிக்கும், இலக்கியத்துக்கும் சேவை செய்தவர் மட்டுமல்லாமல், தம் உயர் பண்புகளையும் அச்சேவையின் வாயிலாக உணர்த்தியவர். விடுதலைப் போராட்டத்தை அந்நிய மண்ணில் செயல்படுத்த இந்திய தேசிய இராணுவம் அமைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அணுக்கத் தொண்டராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் திகழ்ந்த அவர், இலக்கிய மேதை ராஹுல் சாங்க்ருத்யாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலைத் தமிழாக்கம் செய்து தமிழருக்கு அந்த இலக்கிய மேதையை அறிமுகப்படுத்தியவர். அவருடைய நினைவலைகள் ‘முடிவுகளே தொடக்கமாய்’ நூல், இந்நாட்களின் சாதிமதப் பூசல்களால் நொந்து போன இதயங்களுக்கு நன்னீரலைகளாகத் திகழ்கின்றன. சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்பு, அப்பெரியார், என் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்து ஆதரவளித்தார். அந்த ஊக்கமும், பேராதரவும், இந்நாள் வரை, என் இலக்கிய வாழ்வில், புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், வணிக நோக்குடன் வெளியாகும் பத்திரிகைகளை நாடாமலிருக்கவும் எனக்குத் தெம்பளித்திருக்கின்றன. அவருடைய வழித் தோன்றல்களாக, இந்தப் பதிப்பகப் பணியைச் செம்மையுடன் தொடரும், திருமிகு. மீனா, அகிலன் கண்ணன், செல்வி உமா ஆகியோர் இந்நாள் என் நூல்களைத் தொடர்ந்து பதிப்பித்திருப்பது போன்றே, இந்த ‘உத்தரகாண்டம்’ நூலையும் அருமையாக அச்சிட்டு வடிவமைத்து வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களனைவருக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். தமிழ் வாசகப் பெருமக்கள், இதை வரவேற்று ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.

நன்றி; வாழ்த்துக்கள்.
- ராஜம் கிருஷ்ணன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/12&oldid=1049376" இலிருந்து மீள்விக்கப்பட்டது