பக்கம்:உத்தரகாண்டம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118   ✲   உத்தரகாண்டம்

எல்லாம் வராங்க. கவுர்மெண்ட் ஆசுபத்திரில ஒண்ணுமில்லாத ஏழைங்க வந்து உருண்டிட்டுக் கெடக்கும். சுத்தம் சுகாதாரம் ஒண்ணிருக்காது... அங்க பத்தாயிரம் குடுத்தாலும், பாஞ்சாயிரம் குடுத்தாலும் இதுக்கு சரியாவாது’ன்னிடிச்சி...”

“ஏம்பா, இங்கென்ன கதையளந்திட்டு நிக்கிற ? இந்தக்காயெல்லாம் சாக்குல போட்டு, ஏசண்டு ஆட்ல கொண்டு குடுத்திடு.” ரங்கன் வந்து சொல்றான். எந்த ஏசன்டு, யாரு ஏசென்டு என்று கேட்க முடியவில்லை. எதோ ஒரு நாகரிகம் நாவை அழுத்துகிறது. சிலும்புகள் கையைக் குத்துகின்றன. ஆனாலும் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. சொர்ணம் வந்து கேட்டா என்று சொல்லலாமா?

அவன் சாக்கைக் கொண்டு போன பிறகு, நான்கு காய்களைச் சமையலறை மேடை மீது வைத்திருப்பதைப் பார்க்கிறாள். பின்னால் இலைக் குப்பைகளை வேலியோரம் தள்ளி விட்டு, துரட்டுக் கோலுடன் ரங்கன் செல்வதைப் பார்க்கிறாள்.

“ஏம்பா, நாலு காய் எதுக்கு வச்சிருக்கே?...”

“உனுக்குத்தா. உப்புப் போட்டு கஞ்சிக்குக் கடிச்சிக்கலாமில்ல?” அவனுடைய பேச்சின் தோரணை மெல்லிய உணர்வுகளில் முட்களாய் குத்துகிறது. வாங்க போங்க மரியாதை எல்லாம் சுத்தமாகப் போய்விட்டன. அந்தக் காயை இனி எடுத்து நறுக்கக்கூட மனம் ஒப்பாது, அற்பப் பொருள் இல்லை இது. அருமையான பொருள். ஆனால் இவர்களுக்கு எல்லாம் காசு...

வாயில் கீழ்த்திண்ணையில் நின்று ஈரமுடியை அவிழ்த்து விடுகிறாள். எங்கோ அருகில் ‘போர்’ பூமிதுளைக்கும் ஒசை நாராசமாகச் செவியில் விழுகிறது. கம்பிக்கதவைத் திறந்து கொண்டு தெருவில் நின்று பார்க்கிறாள். எதிர்ப்புறம் ‘பிளாட்’ போட்டிருக்கும் இடத்தில்தான் கிணறு தோண்டுகிறார்கள் போலிருக்கிறது. ஏரி இருந்த இடம்தான். குப்பைகளைக் கொட்டி மூடினார்கள். முள் காடாய் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/120&oldid=1023181" இலிருந்து மீள்விக்கப்பட்டது