பக்கம்:உத்தரகாண்டம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    125

தூக்கிக் கொண்டு மாரியம்மன் கோயில் திருவிழாவுக்குக் கூட்டிப்போவார். பெரி...ய காவிரி. அதன் கரை மேல் இருக்கும். இறங்கினால் பரிசல் துறை. கூடைபோல் பரிசல் இருக்கும். அதில் உட்கார்ந்து ஒருநாள் கூடக் காவிரியில் போனதில்லை. திருவிழா ஆடிமாசத்தில் வரும். படையல் போடும் கும்பலைப் பார்த்துக் கொண்டு நிற்பாள். கூட்டம் கோயிலிலா, ஆத்துக்கரையிலா என்று நினைவுத் தெளிவில்லை. அம்மன் தேர் வரும். அய்யா, ஆட்டுத்தலை, மாவிளக்கு, பழம் எல்லாம் கொண்டு வருவார். இந்த நிழல் படங்களும்கூட மங்கும்படி, அவர் ஒருநாள் செத்துப் போனார். சின்னாயி அவளை அதே காவிரியாத்தின் பக்கம் நிறுத்திவிட்டு, “போடி, உங்க மாமன் வூட்டுக்கு?” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். இடுப்பில் ஒரு முழ சீலைத் துண்டு மட்டுமே உடுத்தியிருந்தாள். கரகரவென்று பரிசல் துறையின் பக்கம் இறங்கி நின்றாள். பரிசலில் இருந்து செவத்த அய்யாமார்கள், கோட்டு, கடுக்கன் போட்டவர்கள், பொம்புளைகள் இறங்கி கரைமேல் இருந்த வண்டியில் போனார்கள். நடந்தும் போனார்கள்.

“சேரிப்புள்ள போலிருக்கே? பொழுது எறங்கிப் போச்சே, ஏம்மா நிக்கிற...?” என்று பரிசல்காரர் கேட்டார்.

“எங்கப்பாரு செத்திட்டாரு. எங்க சின்னாயி, ‘நீ மாமவூட்டுக்குப் போயிடு’ன்னு இங்க கொண்டாந்து வுட்டுப் போயிட்டாங்க...” என்று அழுதாள்.

“யாரு உங்கப்பன்...?”

அவளுக்குச் சொல்லத் தெரியவில்லை.

“சின்னாயி அடிக்கும், சூடுவைக்கும்...” என்று பெரிதாக அழுதாள்.

“அடபாவமே?...” அவர் சுற்றுமுற்றும் பார்த்தபோது, இன்னொராள் வந்தார்.

“அதாம்பா, ராயர் பண்ணையாளு. சித்தாதி. குடிச்சிட்டுக் காவாயில வுழுந்து செத்திட்டான். அவம் பொண்ணு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/127&oldid=1049809" இலிருந்து மீள்விக்கப்பட்டது