பக்கம்:உத்தரகாண்டம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126   ✲   உத்தரகாண்டம்

போல இருக்கு இது...” என்ற விவரம் சொன்னதும், பரிசல்காரர் அவளுக்குச் சோறு வாங்கிக் கொடுத்து அவர் குடிசையில் தங்க வைத்துக் கொண்டதும் மறக்கவில்லை.

பிறகு அடுத்த நாள் அவர், காலையில் ஆபீசுக்குக் கச்சேரிக்குச் செல்பவர்கள் செல்கையில், பரிசலில் ஓர் ஓரத்தில் உட்கார்த்தி வைத்தார். முதல் நாள் கோட்டும் கடுக்கனும் தலைப்பாவுமாக வந்த பெரியவர், “ஏம்ப்பா சோலை? உனக்குக் கல்யாணமே ஆவல, இது யாரு பொண்ணு?” என்று கேட்டார். அவர் என்ன சொன்னார் என்பதை அவள் கேட்டுக் கொள்ளவில்லை. அவளுடைய கனவு நிறைவேறிக் கொண்டிருக்கிறது. பெரிய மூங்கில் கம்பை உள்ளே விட்டு, அவர் பரிசலைத் தள்ளிக் கொண்டிருந்தார். பரிசலுக்குள் வெறும் ஒற்றைச் சீலைத் துண்டுடன் கையைக் குறுக்கே கட்டிக் கொண்டு நின்று, காவிரியையும் வெள்ளத்தையும், மூங்கில் கம்பினால் தள்ளிச் செல்லும் விந்தையையும் பார்த்துக் கொண்டிருந்தாள். மூங்கிலை எடுத்து உயர்த்தி மறுபுறம் வைக்கும் போது நீர் சொட்டியது. மேலே பட்டபோது எப்படி உடல் சிலிர்த்தது? இந்தப் பயணத்துக்கு முடிவே வராமல், இவருடன் இந்த ஆற்றின் குறுக்கே போயும் வந்தும்... நீள வேண்டும் என்ற கற்பனையில் இருந்தாள். ‘மறுபடியும் சின்னாயி வீட்டுக்கோ, சின்னாயி போல பொம்புளகள் உள்ள வேறு எந்த வீட்டுக்கோ என்னிய அனுப்பிடாதீங்கையா’ என்று பரிசல்காரரின் கால்களைப் பிடித்துக் கெஞ்ச அவள் உறுதி செய்து கொண்டிருந்தாள். அக்கரை வந்து எல்லோரும் இறங்கிச் சென்றனர். கோட்டுக்காரர்கூட இறங்கி நடந்து போனார்.

“எறங்கு புள்ள, உம் பேரென்ன?”

அவள் இறங்குவதாக இல்லை. பேரும் சொல்லவில்லை. பேரென்று அவளுக்கு என்ன இருந்தது? அப்பன் ‘கண்ணுத்தாய்’ என்று செல்லமாகக் கூப்பிடுவான். ‘உங்காயி எட்டுப் பெத்தா, நீ ஒருத்திதாம்மா எனக்கு அழகாயி போட்ட பிச்ச...’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/128&oldid=1049810" இலிருந்து மீள்விக்கப்பட்டது