பக்கம்:உத்தரகாண்டம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    127

என்று கள்வாடை வீசும் சுவாசம் முட்ட, அணைத்து உச்சிமோந்து பாசத்தைக் கொட்டுவார்.

சின்னாயியோ ஆயிரம் பேதிக்கும், கழிச்சலுக்கும் கூப்பிட்டுச் சாபம் கொடுப்பாள். இவள் பொழுதுக்கும் மண்ணில் தனியாக விளையாடிக் கொண்டிருப்பாள். அப்பன்தான் காலையிலும், பொழுது சாய்ந்த பின்னும் சோறோ கூழோ, எதுவோ கொடுப்பான். அவர் அருமையாக முடிச்சுக்குள் வைத்து வேகவைத்த வள்ளிக்கிழங்கோ, பொட்டுக் கடலையோ கொடுத்தது இப்போதும் கண்களில் நீரை வருவிக்கிறது.

பரிசல் துறையில் நின்றது ‘பெண்’ என்று யாரும் அவளைக் குலைப்பதற்குரிய பொருள் என்று நினைக்கவில்ல. “பொம்புளப்புள்ள அய்யா?” என்று பதனமாகப் பார்க்க, அக்கரையில் வக்கீல் அய்யர் வீட்டில் சேர்த்தார். அவர் காந்தி கட்சி. அவளைப் பின்புறமாகத் தான் பரிசல்காரர் கூட்டிச் சென்றார். மாட்டுக் கொட்டகை, எருக்குழிகள்... வாழை மரங்கள், அவரைப் பந்தல்... இவரும் பின்னாலிருந்து தான் கூப்பிட்டார்.

“ஏம்ப்பா, என்ன விசயம்?...”

மஞ்சட்சீலை உடுத்த சிவப்பாக ஒரு பெண் பிள்ளை. அம்மா... அய்யர் சாதிக்கட்டு. காதுகளில் வயிரத் தோடுகள் மின்னின. மூக்கில் பொட்டுகள் பளபளத்தன. இவர்கள் வீட்டிலா...?

“பரிசக்காரையா, என்னிய இங்கெல்லாம் வுட்டுட்டுப் போகாதீங்க? நா உங்ககூட வாரேன். உங்கக்குக் கஞ்சி காச்சித்தாரேன். ஒங்கக்கு எதுன்னாலும் செய்யிறே...” என்று அவர் காலைப் பிடித்துக் கொண்டாள்.

“யாரப்பா, குழந்தை, உள்ளே வாயேன்?”

“இருக்கட்டும்மா...” என்று சொல்லிக் கொண்டு கொட்டில் கடந்து கிணற்றுக்கரைப் பக்கம் நின்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/129&oldid=1049811" இலிருந்து மீள்விக்கப்பட்டது