பக்கம்:உத்தரகாண்டம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128   ✲   உத்தரகாண்டம்


“இது... சேரி... குடிபடைச்சாதிங்க. அப்பன் ஆயி செத்து, அநாதியா வந்து நிக்கிது. பொம்புளப்புள்ள அம்மா, காபகம் வந்திச்சி. ஏதோ கொட்டில்ல சாணி சகதி அள்ளிப்போடும். ஒரு நேரம் ரெண்டு நேரம் சோறூத்துங்க. உங்கக்குப் புண்ணியமாவும்...”

“அஞ்சு வயசுகூட இருக்காது போல... பாவமே?...” என்றவள் அருகில் வந்து அவள் கையைப் பற்றினாள். விலாவில் சின்னாயி போட்ட சூடு புண்ணாக இருந்தது. அதில் ஈ வந்து குந்தியது...

“என்னம்மா இது? இது சூட்டுக்காயம் போல... அடாடா... சீக்கோத்திருக்கு?” அவள் கோவென்று பெரிதாக அழுதாள்.

“ரெம்ப பயப்படுதுங்க. பொம்புளப்புள்ள, உங்களுக்குப் புண்ணியமாப் போவுதும்மா, சின்னாயி கொடும, நாளும் தெரிஞ்சவ...”

“நீ கவலப்படாத என் வீட்டுப் பிள்ளையாப் பாத்துப்பேன். எங்க வீட்டுக் கமலி போல பாத்துப்பேன். போயிட்டுவா.” என்று அவனை அனுப்பினாள். இவளுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள். “சீ... அழாத அழக்கூடாது...” என்று அவள் கண்களைத் துடைத்தாள். சோப்புப் போட்டுக் குளிப்பாட்டினாள், கிணற்றில் நீரிறைத்து ஊற்றி... ஒ! அவர்களுக்குக் கிணறு கிடையாது. மோட்டுவாய்க்கால் கரையில்தான் சட்டி பானைக்கழுவி, துணி அலசி... அப்பன் செத்தபிறகு அவள்தான் எல்லாம் செய்வாள். சின்னாயி காலையில் வயலுக்குப் போனால், மாலையில் அந்த இன்னொரு ஆளுடன் வருவாள். இருவரும் கள் குடிப்பார்கள். சோறு காய்ச்சினால் ஒரு வாய்கூட வராது. கேட்டால் அடிப்பாள். குளிப்பாட்டி, சூட்டுக்காயத்தைப் பஞ்சால் துடைத்து ஏதோ களிம்பு போட்டாள். புண்ணில்படாமல், கால்வரை தொங்கும் கவுன்... பூப்போட்டது. அவளைக் குளிப்பாட்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/130&oldid=1049812" இலிருந்து மீள்விக்கப்பட்டது