பக்கம்:உத்தரகாண்டம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132   ✲   உத்தரகாண்டம்


சுந்தரம் சுந்தரம் என்று ஒருவர் வருவார். அம்மா ராட்டை வைத்து நூல் நூற்பார். அவர் பஞ்சு பட்டை கொண்டு வந்து கொடுப்பார். நூற்ற நூலை சிட்டத்தில் சுற்றுவதை அவள் பார்த்துக் கொண்டே இருப்பாள். அம்மா அவளை எழுதச் சொல்லிவிட்டு, நூற்பார்.

“காந்தி, கடங்காரன், சண்டாளன், இப்படி பரம்பர தர்மங்களை நாசம் பண்ணிட்டானே ?” என் வீட்டில, எனக்குக் கை நனைக்க வழியில்லாம இப்படி அட்டுழியம் பண்றாளே? அம்மா இல்லாத குழந்தைன்னு கண் கலங்காம வச்சிண்டிருந்தேன். பாவி நெருப்பை அள்ளிக் கொட்டுறாளே! ஆசாரிய சுவாமிகள் வராராமா?”

“ஆமா. பிரும்மதானபுரம் சத்திரத்தில் தங்கறாராம். இந்தத் தெரு வழியா நாளைக்கு வறாராம். பூரணகும்பம் குடுத்து உபசாரம் பண்ணனும்னு எங்கண்ணா சொல்லிண்டிருந்தான். பத்து நாள் தங்குவார் போல. இப்பத்தான் விவஸ்தையே இல்லையே? தலை எடுக்காம, எவளானும் என்னைப்போல இருக்கறவா தெருப் பக்கம் வந்தோ எட்டிப்பாத்தோ தொலைக்கக்கூடாது. அப்படி ஒராத்துல பிக்ஷை பண்ணிட்டிருக்கப்ப, ஒரு மூதேவி தெரியாம, அந்தாத்துல வந்துடுத்தாம். பிக்ஷை எடுக்காம போயிட்டாராம்...”

“ஏ ருக்மிணி! இங்க வாடி! ஏற்கெனவே அது ஆடிண்டிருக்கு, நீ கள்ள ஊத்திக் குடுக்கிறியா? வந்து சோத்தப் போட்டுட்டுப் போயச் சேரு? என்னடி பேச்சு?” என்று அம்மா கத்தியபோது அவளுக்கே தூக்கி வாரிப்போட்டது. பாவம், அந்தம்மா...

“அஞ்சு வயசிலும் பத்து வயசிலும் கல்யாணத்தப்பண்ணி வச்சிட்டு, பொண்ணுகள வதைக்கிறது? யாருடி அந்த ஆசாரியன், எதுக்கு இப்படிக் கொலை பாதகம் பண்றான்?...” என்று அம்மா, சம்பு என்றழைக்கப் பெற்ற தெய்வம், காளி அவதாரம் எடுத்தாற்போல் கத்தினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/134&oldid=1053491" இலிருந்து மீள்விக்கப்பட்டது