பக்கம்:உத்தரகாண்டம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   135


“என்னடி பயமுறுத்தற? உன்ன இந்த நிமுசமே வெளியேத்தி ஜயில்ல களிதிங்க வைக்க முடியும் என்னால! என்ன நினைச்சிண்டிருக்கே! நாளக்கி, இந்தப் பறக்கழுதயே, உம்புருசனக் கைக்குள்ள போட்டுண்டு உன்ன இந்த வீட்ட விட்டு வெறட்டலன்ன என்ன ஏன்னு கேளு! பாம்புக் குட்டிக்குப் பால் வாக்கிற! ஏதோ ஆம்புளக் கழுதயானாலும் பொதி சுமக்கும். இது உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் சாதி! கேட்டுக்க!” என்று கத்திவிட்டு ஒருவாய் தண்ணீர் கூடக் குடிக்காமல் கமலியை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. எங்கேனும் ஓடிப்போய் விடலாமா என்று நினைத்தாள். அவள் அழ அழ, அம்மா கண்ணீரைத் துடைத்தாள். ஆனாலும் சாப்பிடப் பிடிக்கவில்லை. படுத்தால் தூக்கம் வரவில்லை. “அம்மா... என்ன எங்கூருக்கே, எங்னாலும் அனுப்பிச்சிடுங்க. என்னால உங்கக்குக் கஸ்டம்- என்னத் திட்னாத்திட்டட்டும். நா உசந்த சாதில பிறக்கல...”

இப்படிச் சொன்னபோது, அம்மா அவளைக் கட்டிக் கொண்டாள். அவளுக்கும் அழுகை வந்தது. அம்மா அழுவதைக் காண முடியவில்லை. எந்நேரமும் அவள் எங்கும் போய் விடாதபடி பாதுகாத்தாள்.

அன்று நூல் நூற்றாள். அறுந்து அறுந்து போயிற்று. அவர்கள் வீட்டில் கையால் ‘கீ’ கொடுக்கும் ஒரு கிராம போன் இருந்தது. என்றைக்கானும் இரவில் அம்மா அதில் பாட்டு வைப்பார். அதில் காந்தி பாட்டு வரும். ‘நம்பிக்கை கொண்டெல்லோரும் கை ராட்டைச் சுற்றுவோம்’ என்று ஒரு பாட்டு வரும். மதிச்சயத்துல குடியிருக்கிறது; மதுரையில் பாலு விக்கிறது. மோரு விக்கிறது...” இந்தப் பாட்டைக் கேட்டால் கமலியும் அவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ட்ரியோ டேயன்னா என்று ஆடு மேய்க்கும் பாட்டு வரும்... பிறகு, நாடித்துதிப்பேன் நமசிவாயவே...ன்னு ஒரு பாட்டு...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/137&oldid=1049826" இலிருந்து மீள்விக்கப்பட்டது