பக்கம்:உத்தரகாண்டம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136   ✲   உத்தரகாண்டம்


அன்று அவளைச் சந்தோசப் படுத்த அம்மா பாட்டு வைத்தார். ஆனால் அவளுக்குப் பிடிக்கவில்லை. குப்புறப்படுத்துக் கொண்டு விம்மினாள்.

அந்த நாட்களில்தான் சிவன் கோயில் மீட்டிங்கில் பேச இந்தையா வருகிறார் என்று சுந்தரம் வந்து சொன்னார்.

“நான் நினைச்சால் உன்னை ஜயிலில் தள்ளிக் களிதிங்க வைக்க முடியும்”என்று அண்ணன் சொன்னதிலிருந்து தானோ என்னமோ அம்மாவுக்கு ஒரு பயம் வந்திருந்தது.

“சுந்தரம், அவரை நம் வீட்டுக்குக் கூட்டி வாயேன்? எங்கே வந்து தங்கிருக்கார்?... நடராஜ சுந்தரம் வீட்டிலா?”

“ஆமாம். அவர் சம்சாரமும்கூட வந்திருக்காங்க. அவங்களும் ஜெயிலுக்குப் போனவங்க. கள்ளுக்கடை மறியல் செய்து மூணு மாசம் தண்டனை பெற்று வந்திருக்கிறார்...”

அப்போதுதான் அவர்களை, இந்தப் புதிய பாதுகாவலர்களை அவள் பார்த்தாள், அவர்களுடனேயே வந்துவிட்டாள்.

நல்லவர்களை எல்லாம், கடவுள் ஏன் சோதிக்கிறார்?

ஐந்தாறு வருசங்கள் கூட சம்பு அம்மா பிறகு உயிரோடு இருக்கவில்லை. காச நோய் என்று சொன்னார்கள். போர்க்காலம். இவள், அம்மாவின் அம்மா, பாட்டி, சுற்றம் அகதிகள் என்று இந்த வீட்டில்தான் இருந்தாள். காந்தியோடு எல்லாத் தலைவர்களும் அய்யாவும் சிறையில். குண்டு பயம் என்று ஊரே காலி செய்து கொண்டு சனக்கும்பல் எங்கெங்கோ கிராமங்களில் அடைந்திருந்தது.

அவள் அங்கு வரும்போது ராதாம்மா பிறக்கவில்லை.

சம்பு அம்மாவைப் பார்க்க குரோம்பேட்டை ஆசுபத்திரிக்குப் போன போது, ராதாம்மாவுக்கு நாலைந்து வயசிருக்கும். இவள் வயசுக்கு வந்து, எட்டு கசம் கதர் சிற்றாடை உடுத்து, கல்யாணத்துக்கு நின்ற நேரம். “தாயம்மா, சம்பும்மா ஆஸ்பத்திரில படுத்திருக்காங்களாம், உன்னைப் பார்க்கணும்னு சுந்தரத்துக்கிட்ட சொல்லி அனுப்பியிருக்கா. இப்படியே குறுக்க ஓரெட்டு நடந்து போகணும், வரியா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/138&oldid=1049827" இலிருந்து மீள்விக்கப்பட்டது