பக்கம்:உத்தரகாண்டம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   137

பின் கட்டில் புளி கொட்டை எடுத்துக் கொண்டிருந்தவள் ஓடி வந்தாள். அம்மாவும் அவரும் வெளிச் செல்வதைப் பார்த்துவிட்டு, ராதாம்மாவும் “நானும் நானும்” என்று ஓடி வந்தது.

“நீ பாட்டிட்ட இரு. ஜானு, பல்லாங்குழி ஆடச் சேத்துக்க!” என்று சொல்லிவிட்டு, இரண்டு பேரும் கிளம்பினார்கள். சுந்தரம்... அவர் முடிவழுக்கையாகி, அடையாளமே தெரியாமல் மெலிந்து இருந்தார். அவளைப் பார்த்து அடையாளப் புன்னகை செய்தாரே ஒழிய, பேசவில்லை.

தோப்பும் துரவும் குளமும் குட்டையுமாக இருந்த இடங்கள் கடந்து அந்த ஆஸ்பத்திரிக்குப் போனார்கள். காவல் என்று எதுவும் இருந்ததாக நினைவில்லை. ஒரு குன்றின் மேல் ஏறினார்கள். ஓராளிடம் சுந்தரம் அய்யா, ஒரு சீட்டைக் காட்டினார். சாத்துக்குடியும், பிஸ்கோத்தும் அடங்கிய வலைப்பையை அவள் சுமந்து வந்திருந்தாள். ‘காட்டேஜ்’ என்றார்கள்.

கட்டிலில் படுத்திருந்தது... சம்பு அம்மாவா?

வயிரங்கள் பூரிக்க, நெற்றியில் பொட்டுடன் மஞ்சட் கதர் சேலையில் முதன் முதலாக அவள் பார்த்த அந்த சம்பு அம்மாவின் உருவமா இது?...

“அம்மா...!” என்று அவள் அலறிக் கொண்டு அருகில் போனாள். ஆனால், இந்தம்மா அவளை அருகில் செல்லக் கூடாது என்பது போல் தடுத்தாள்.

கண்கள் இருந்த இடத்தில் இரண்டு வங்குகள் தெரிந்தன. முகம் சப்பி முடிகத்திரிக்கப்பட்டு...

உணர்ச்சி வசப்பட்டு அவள் கண்ணம்மா என்று நீட்டிய கை வெறும் எலும்பாக, நரம்பாக இருந்தன. இருமல் வந்துவிட்டது.

இவள் சட்டென்று தாவிப் பற்றிக் கொண்டாள்; நெஞ்சை நீவிவிட்டாள். சளிதுப்பும் மூடிபோட்ட பெட்டியில் இரத்தத்துடன் விழுந்த கோழை...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/139&oldid=1049976" இலிருந்து மீள்விக்கப்பட்டது