பக்கம்:உத்தரகாண்டம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138   ✲   உத்தரகாண்டம்


“அம்மா... அம்மா... அந்த தெய்வத்துக்குக் கண் குருடா...?”

“கண்ணம்மா... என்னைத் தொடாதே, வானாம். சரோஜா... குழந்தை நல்லாருக்காளா ? எத்தனை வயசாச்சு...?”

கிணற்றுக்குள்ளிருந்து பேசும் குரல்.

ஆனால் அவள் விடவில்லை. பேச்சே எழும்பாமல் இவளுக்குத் துயரம் முட்டியது. “சரோ, கண்ணம்மாவுக்கு நல்ல பையனா, உடம்பு உழைக்கும் உழைப்பாளியாக ஒருத்தனைப் பார்த்துக் கல்யாணம் செய்து கொடுத்துடுங்க. கண்ணம்மா, எப்டீருக்கே? படிக்கிறத விட்டுடாதே...”

இவள் எதுவுமே பேசத் தெரியாமல் பிரமை பிடித்தாற் போல் நின்று கொண்டிருந்தாள்.

“கண்ணமங்கலத்துல ஒரு நல்லபையன் இருக்கான். அங்க ஸ்கூல் படிப்பு முடிச்சிட்டு எங்க வீட்டோடு தானிருக்கிறான். தூரத்து உறவு. அவப்பா அந்தக் காலத்தில் சிலோன் தேயிலைத் தோட்டத்துக்கு வேலை செய்யப்போயி, அங்கேயே செத்திட்டார். அம்மா மட்டும் இருக்கா...”

“கண்ணம்மாக்குப் புடிச்சாக் கட்டிக்கட்டும். அவ சம்மதிக்கணும்...” அம்மா எங்கோ பார்த்துக் கொண்டு இதைச் சொன்னார்.

பிறகு, “கண்ணம்மா, நீ போய்ச் சேர்ந்திருக்கும் இடம் பரிசுத்தமான இடம். நா எதச் சொல்றன்கிறத நீயே... தெரிஞ்சிப்ப. ஆனா, நான்தான் மேலானவன்னு திமிருல இருக்கிறவந்தா முக்காவாசி ஆம்புளயும். அந்த ஆம்புளக்கும் ஒழுக்கம், சத்தியம்தான்னு காந்தி மகான்தான் சொல்லிருக்கார்...

இவள் சம்பு அம்மாவின் கையைப் பற்றி அழுத்தமாகத் தன் உணர்ச்சியைக் கொட்டினாள். கை கதகத வென்றிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/140&oldid=1049977" இலிருந்து மீள்விக்கப்பட்டது