பக்கம்:உத்தரகாண்டம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   139



“பொண்ணாப்பிறந்தவ அவனுவ என்ன செஞ்சாலும் பொறுக்கணும். இல்லேன்னா... இல்லேன்னா... நீ பொம்புள தாண்டி, பொம்புள தாண்டின்னு...”

“சம்பு... வாணாம், வாணாம்மா, அழக்கூடாது...” என்று அம்மா சாத்துக்குடியை நறுக்கி, அங்கே அலமாரியில் இருந்த கண்ணாடியை எடுத்து அழுத்தி சாறு எடுத்தார். அவளே வாங்கி அதைப் பருகச் செய்தார்.

அலமாரியில் இருந்த அட்டைப் பெட்டியை, ஊசி மருந்தை எடுத்துப் பார்த்தார்.

“அம்மா, நா இங்கியே தங்கி அம்மாக்கு வேண்டியதச் செய்யட்டுமா?”

“வாணாம், வாணாம்மா, யாருமே இங்க தங்கக் கூடாது. பத்திரமா வீட்டுக்குப் போங்க. ஒட்டுவாரொட்டி சீக்கு. போங்கம்மா... நீங்க வந்ததே எனக்கு ரொம்ப ஆறுதல். சுந்தரந்தா அப்பப்ப கவனிச்சுக்கறான். எனக்கென்ன வேணும்...? சுதந்தரத்தத்தான் பாக்கமாட்டேன்?” இதற்குள் மூச்சிரைத்து இருமல் வந்துவிட்டது.

யமவாதனை என்றால் இதுதானா...?

வீட்டுக்கு வந்ததும் பின் பக்கம் நச்சுக் கொல்லி சோப்போட்டுத் தேய்த்து அம்மாவும் அவளும் குளித்தார்கள். துணிகளைத் துவைத்து உலர்த்தும் போது அழுகை அழுகையாக வந்தது.

இப்போதும்கூட அந்தத் துயரம் ஆறாத புண்ணாக மேலுக்கு வருகிறது. சாவு வீட்டுக்குச் சென்று வந்தாற் போல் குளித்தார்கள்.

ஒரு மாசத்துக்குள் சம்பு அம்மா இறந்துவிட்டார்கள். சேதியை இங்கே வந்து சுந்தரம் சொல்லவில்லை. ஒரு மாசமான பிறகுதான் தெரிய வந்தது.

அப்போது, இவளுக்குக் கல்யாணம் செய்ய அம்மா அய்யா, ராதாம்மா எல்லோரும் கண்ணமங்கலம் கூட்டிச் சென்றிருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/141&oldid=1049978" இலிருந்து மீள்விக்கப்பட்டது