பக்கம்:உத்தரகாண்டம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   141



“ஒரே விலை. அம்பது ரூபா பை நானும் குடுத்திருக்கிற. இந்த ஒயர பாத்தியா? இருபத்தஞ்சு வருசம் தாங்கும். அப்பிடிப் போட்ட பையி. பிளாஸ்டிக்பை, கேடு கேட்டது, மூணு மாசத்தில புடி புட்டுக்குது, அது அம்பது அறுபதுன்னு விக்கிறாங்க...”

“சரி, எழுபத்தஞ்ச வச்சிக்க!...”

“ஒரு பைசா குறையாது. தொண்ணுறுன்னா தர கட்டுபடியே ஆகும். ரயில் செலவுக்குக்கூட வராத கிராக்கி...”

அந்தப் பெண் மேலும் பார்த்து ஒன்றை எடுக்கிறாள். கைப்பையில் இருந்து ஒரு ஐம்பது ரூபாயும், மூன்று பத்து ரூபாய் நோட்டுகளையும் எடுத்துக் கொடுக்கிறாள். அடுத்தடுத்துப் பை வாங்க வருகின்றனர்.

ஒயர் எங்கே கிடைக்கிறது என்ற வினாவுக்கு விடை தெரியவில்லை. முன்பெல்லாம் கடைகளில் இதே பைகள் மாட்டியிருப்பார்கள். அவர்களிடமே ஒயரும் கிடைக்கும்.

“ஏம்ப்பா, ஒயர்... கூடைபின்னுறது இருக்கா?”

“இப்ப யாரும்மா இந்தக் கூடை எடுத்திட்டுப் போறாங்க? விதவிதமா பிளாஸ்டிக் பை வந்திடிச்சி. அல்லாப் பொம்புளகளும் டுவீலர்ல சர்ருனு வேலைக்குப் போறாங்க? காய்கறி, துணி மணி எல்லாம் ‘கேரி பேக்’ வந்திடிச்சில்ல?” என்று விளக்கம் கூறுகிறான் கடைக்காரப் பையன்.

தள்ளுபடி விற்பனை! ஆடிக்கழிவு... வாங்க, வாங்க என்று பாத்திரக்கடையில் இருந்து அடுக்கடுக்காக ஆட்டு உரல் ‘கிரைண்டர்’களும் குளிரலமாரிகளும் குவித்திருக்கும் கடைகளில் விற்பனைப் பையன்கள் அழைக்கிறார்கள். தெருவில் தலையணையில் இருந்து, போர்வை வரை போட்டுக் கொண்டு விற்பனை நடக்கிறது. ஒவ்வொரு கடையிலும், பொருட்களைக் காட்டவும் பேசவும், இளவயசுப் பெண்கள் தாம் இருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/143&oldid=1049980" இலிருந்து மீள்விக்கப்பட்டது