பக்கம்:உத்தரகாண்டம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142   ✲   உத்தரகாண்டம்


இரவு ஒன்பது, பத்து மணி வரையிலும் இவர்கள் வேலை செய்து விட்டு, பதனமாகப் போய்ச் சேருவார்களா? மறுபடி மறுபடி சங்கரியின் முகம் தோன்றுகிறது. வீட்டுக்குள் ஆண் துணை இல்லாத பெண் என்றால், இந்த அளவுக்கு, குடும்பம் இருக்கமாக மக்கள் வசிக்கும் தெருவில் துணிந்து...

சே, நினைக்கப் பொறுக்கவில்லை, வேறு எதுவும் தோன்றவும் இல்லை.

இன்னைக்கு சங்கரி... நாளைக்கு எனக்கோ, என் பெண்ணுக்கோ... என்று நெருப்புக் குரலில் வெந்து வடித்தாளே, பத்து நூறு பிள்ளைகளுக்குக் கல்விப்பணி செய்யும் ஜயந்தி டீச்சர்...

அந்தக் காலத்திலும் இப்படி. அரசப் பொரசலாக, தொடர்பு கற்பிப்பது உண்டு. ஆனால், உண்மையோ பொய்யோ, வித்யாலயத்தில், மருதமுத்து தன்மீது மாசுபட்டுவிட்டது என்ற சொல்லையே தாங்காமல் ரயில் தண்டவாளத்தில் தலை கொடுத்தான். ஓராண் பெண் தொடர்பு, உறவு என்பது, கல்யாணம் என்ற புனிதப் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்கப்படும் விலை மதிப்பில்லாத பொக்கிசம். அதை இப்படிக் காலில் போட்டு மிதித்து சூறையாடுகிறார்களே?... இதை எல்லாம் கேட்கவா, உயிர் வாழ்கிறாள்?...

“என்ன, ஆச்சிம்மா? எங்கே இந்தப் பக்கம்?...”

சட்டென்று நின்று பார்க்கிறாள். “யாரு...?...”

பருமனாக சிவப்பாக, சுருளான செம்பட்டை முடியை அழுந்த வாரிய பெரிய கொண்டை... வயிரங்கள்...

“என்ன, பழமானூர்தெரு பங்களா வீட்டு ஆச்சிதானே? புரியலியா என்ன? குஞ்சம்மா பொண்ணு சவுந்தரம்... பாத்து ரொம்ப நாளாச்சி... பாய் மாமா மவுத்தான சேதி கேட்டு அந்தப் பக்கம் வந்தேன். நீங்க வந்திட்டுப் போனதா சொன்னாங்க. நான் தலைய காட்டிட்டு உடனே காரில வந்திட்டேன். இவ எம் பொண்ணு. ஊர்மிளான்னு பேரு. இவ கல்யாணத்துக்குப் பத்திரிக்கை வைக்கிற சாக்குல கூட வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/144&oldid=1049981" இலிருந்து மீள்விக்கப்பட்டது