பக்கம்:உத்தரகாண்டம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150   ✲   உத்தரகாண்டம்

மனிசாளோடு பழகுறவரு... அதுலய இவள உங்க மகளப் போல பாத்து, ஏத்தாப்புல சொல்லிக் குடுங்கம்மா...!” என்று சொல்லி விட்டு மறுநாளிரவே அவர்கள் ஊருக்கு வண்டியேறிவிட்டார்கள். மறுவீடு அழைத்துச் செல்லக்கூட, மருமகப்பிள்ளைக்கு, புதிய அரசியல், வெற்றிப் படப் புகழ் போதையில் மேலும் அதே துறையில் பல வேலைகள். புதிய மொசைக் போட்ட தளம். குளியலறை, கழுவும் பீங்கான், பாத்திரங்கள் கழுவும்இடம், காஸ் அடுப்பு, குக்கர், எல்லாம் பெண்ணுக்குப் பார்த்துப் பார்த்து வாங்கி இருந்தார்கள். அவளுக்கே இந்தக் குக்கரை உபயோகிக்கத் தெரியாது. அதிகம் பேர் சாப்பிடுவதற்கு, பானைதான் வைத்து வடிப்பார்கள், அவள் புழங்கிய சமையற் கூடத்தில். அவள் வீட்டிலும் சிறுசிறு பிளாச்சு விறகாகக் கட்டை தொட்டியில் இருந்து வாங்கி வருவாள். சூளையில் வைத்த மண் அடுப்பு, ஒரே கட்டைத் தீயை அடக்கமாகப் பாத்திரத்தில் ஏற்றி சமையலை மிக எளிதாக்கும். சமையற் கூடத்தில், பெரிய இட்டிலிக் கொப்பரை உண்டு. ஆட்டாங்கல்லில்தான் மாவாட்டுவார்கள். அம்மி, கல்திரிகை எல்லாம் புழக்கத்தில் இருந்தன.

“அத்தே, எனக்கு இதவச்சி சமைக்கத் தெரியாது. என்ன செய்ய?” என்றாள் ரஞ்சிதம். “நா எதக்கண்டேன்? இத எப்பிடிக் கொளுத்துறதுன்னு கத்துக்கிட்டதோடு, அதையும் அந்த சமையக்காரப் பயகிட்டக் கேட்டிருக்கலாம் இல்ல?”

“தெரியல அத்தே...”

“போவுது...” என்று ஒரு புதிய அடுக்கைத் தேர்ந்து அதில் ஒரு பாத்திரத்தில் அரிசியும், மேலே பருப்பும் வைத்து, நீரூற்றி மூடி அடுப்பில் ஏற்றச் சொன்னாள். அந்தக் காலத்தில் புனாவில் இருந்து அப்படி ஓர் அடுக்குப் பாத்திரம் வாங்கி வந்திருந்தார் அம்மா. காலையில் நல்லபடியாக இட்டிலி காபி அவளே தயாரித்துப் புதிய மருமகளைக் கொடுக்கச் செய்தாள். மேசையில்தான் பரிமாறல். அப்போ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/152&oldid=1049989" இலிருந்து மீள்விக்கப்பட்டது