பக்கம்:உத்தரகாண்டம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   151

தெல்லாம் சாப்பாட்டு மேசை, அவள் பழகியிருக்கவில்லை. பித்தளை செம்புப் பாத்திரங்களுக்குப் பதிலாக, ‘ஸில்வர்’ என்று சொல்லும் பாத்திரங்கள் இடம் பெற்றிருந்தன. அவள் மகனின் முன் விழிக்கவுமில்லை. பேசவுமில்லை. காலையில் கார் வந்தது, அவன் போய் ஏறிக் கொண்டான்.

வீடு பெருக்கித் துடைத்து, பாத்திரம் கழுவி, நீர் பிடித்து வைத்து எல்லா வேலையையும் அவளே செய்தாள்.

“அத்தே, நீங்க எதுக்கு இதெல்லாம் செய்யறீங்க? வேலைக்கு ஒரு ஆள் போட்டுக்கலாமில்ல?” என்றாள் ரஞ்சிதம்.

“வாணாம்மா, நா இருக்கிற வரையிலும் ஆளெல்லாம் வானாம். இதெல்லாம் எனக்குப் பழக்கம்தானே?” என்று மறுத்துவிட்டாள்.

காலையில சென்றவன்தான். மதியம் சாம்பார், பொரியல், எல்லாம் வைத்துச் சமைத்தாள். புதுமணம் என்ற கருக்கு மாறாத வீடு, வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், இனிப்பு வகைகள், எல்லாமே இருந்தன.

“முதல்ல சாப்பிட வரச்சே, ஒரு லட்டுவும் பழமும் வச்சுப் பரிமாறும்மா? உங்க வாழ்க்கை நல்லா, புள்ள குட்டியோட சந்தோசமா இருக்கணும்மா!” என்றாள். முடிசீவிப் பூச்சூடி அலங்கரித்தாள். சுவாமி அறை என்று ஒரு தனி அறை இருந்தது. லட்சுமி, சரஸ்வதி, பிள்ளையார், முருகன் என்று வெள்ளிப் படங்கள் சுவரில் மாட்டியிருந்தார்கள். இரண்டு அழகிய குத்து விளக்குகள் சுவாமி அறையில் எரிய விட்டிருந்தார்கள். பகல் ஒரு மணிக்கு அவன் சாப்பிட வருவான் என்று எதிர்பார்த்திருந்தாள். ‘காம்பவுண்டு’ சுவர் தலைமறைவாக உயரம். பெரிய இரட்டைக் கதவு வாசல். கார் வந்து போக வசதியாக இருந்தது. வீடுகட்டி வெள்ளையடித்து ‘பெயின்ட்’ அடித்த மிச்ச சொச்சங்கள், சுற்றிலும் நிறைந்திருந்தன. வசதியாக நல்ல பூச்செடிகளும் காய்கறிகளும் பயிரிடலாம். இந்த இடம் புதிய பகுதி. சற்று எட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/153&oldid=1049990" இலிருந்து மீள்விக்கப்பட்டது