பக்கம்:உத்தரகாண்டம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152   ✲   உத்தரகாண்டம்

நடந்தால் பூந்தமல்லிச் சாலை. அக்கம் பக்கம் என்று வீடுகளின் நெருக்கம் இல்லை.

“மணி ஒன்னே காலாயிடிச்சி. கண்ணு, நீ சாப்பிட்டுக்க, முகம் வாடிப் போச்சு...” என்றாள் மருமகளிடம்.

“வாணாம் அத்தை, அவங்க வரட்டும்...” என்றாள். மாறாக, “நீங்க சாப்பிடுங்க அத்தை, காலம நீங்க டிபனும் சாப்புடல. வெறும் கேழ்வரகு கஞ்சிதா குடிச்சீங்க” என்றாள் அவள். இவளுக்கு அடிவயிற்றில் சில்லிடத் தொடங்கியது.

திருமணம் நடந்து, மஞ்சளின் பசுமை மாறவில்லை. மணி மூன்றாயிற்று. “ஆம்புளங்க, போனா ஆயிரம் வேலை இருக்கும்மா; நீ உக்காரு, நான் சோறு வைக்கிறேன்” என்று லட்டுவும் பழமும் வைத்துச் சோறு வைத்தாள். சோற்றை எடுத்து வாயில் போட்டுக் கொள்கையில் அழுகை வந்து விட்டது. “இப்படி ஒரு பாவமா?...” செல்லமாக வளர்த்த பெற்றோரை விட்டு வந்து முன்பின் தெரியாதவனிடம் உறவு கொள்வது, பெரிய புரட்சி. அவளுக்கு அப்பனின் ஆதரவைத் தவிர எதுவுமே புரிந்திராத வயசு, பயமும் தெரியாது. வந்து சேர்ந்த இடமோ அன்பைப் பொழிந்தவர்கள். புருசனும் அவள் மீது மதிப்பையும் உயிரையும் வைத்திருந்தான். ஆனால், இவன்...

இரவுச் சாப்பாட்டுக்கும் வரவில்லை.

மாடிப்படுக்கையறைக்கே போகாமல் கீழே போட்டிருந்த சோபாவில் உட்கார்ந்தே சோர்ந்திருந்தது. “எதானும் சாப்பிடம்மா? பட்டினியே படுத்துக்கக் கூடாது...”

இவளுக்கே பேசப்பிடிக்கவில்லை. பகலில் சமைத்தது ஆறியிருந்தது. சூடு செய்து, கொஞ்சம் சாப்பிடச் செய்தாள். இவளும் ரசத்தை ஊற்றிக் கரைத்துக் குடித்துவிட்டு, கீழே ஒரு பலகையைத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்திருந்தாள். முதன் முதலாக, சம்பு அம்மா அரவணைப்பில் அந்தக் கூடத்தில் பழைய புடவை மெத்தையில் முடங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/154&oldid=1049991" இலிருந்து மீள்விக்கப்பட்டது