பக்கம்:உத்தரகாண்டம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   153

உறங்கிய நினைவு வந்தது. குழந்தைப் பருவம் எவ்வளவு தூய்மையானது? இவளும் குழந்தைதான். “எங்க புள்ளக்கி ஒண்ணும் தெரியாதுங்க, நல்லது பொல்லாதது...” என்று அவள் தாய் கூறியது செவிகளில் ஒலிக்கிறது. இவள் பிள்ளை எப்பேர்ப்பட்டவன்? அவன் இந்தியை எதிர்க்கட்டும், அதிரடி அரசியல் பேசட்டும், சினிமா வசனம் எழுதட்டும், வசனம் பேசி நடிக்கட்டும்; குடிக்கட்டும். இவனையே நம்பி கைபிடித்திருக்கும் இந்தக் குழந்தைப் பெண்ணைப் பூப்போல் வைத்துக் கொள்ள வேண்டுமே?

பஞ்சமியைப் புருசன் எப்படி அன்போடு வைத்திருந்தான்? அவளுக்குக் கொடுப்பினை இல்லை. ஆனால், சம்பு அம்மா, புருசன், தாமு?

இப்போது நினைத்துப் பார்க்கிறாள். அவர்களிடையே எந்த உறவும் இருந்திருக்கவில்லை என்றே ஊகிக்கிறாள்.

விடியற்காலையில் இவள் கதவு திறந்து குழாய் நீரைப் பிடித்து முன் வாசல் தெளிக்க வருகையில் கார் வந்து நின்றது.

இவள் திகைத்துப்போய் வாளியோடு ஒதுங்கினாள். மேல்வேட்டி விசிற இவன் கார்க் கதவை ஓங்கி அடித்து விட்டு உள்ளே சென்றான். மாடிப்படியில் அவன் ஏறிச் சென்றது தெரிந்ததும் அவள் வாசல் பெருக்கி, கோலமிட்டாள். திரும்பி வந்து சோபாவிலேயே படுத்துத் துங்கிவிட்ட மருமகளை மெள்ள எழுப்பினாள்.

“அம்மா, ரஞ்சிதம், உம்புருசன் வந்திட்டாப்புல. போயி காப்பி கீப்பி வச்சிட்டு வரவான்னு கேளு...” என்றாள்.

அவள் திடுக்கிட்டாற்போல் எழுந்தாள். “ஒண்ணுமில்லம்மா, பயந்திட்டியா? போயி முகம் கழுவிக் கிட்டு, காப்பி வச்சித் தாரேன், எடுத்திட்டுப் போ! மணி ஆறாயிடிச்சி...”

முதல் நாளிரவு காய்ச்சிய பால் இருந்தது. புதிய பால் இன்னமும் வந்திருக்கவில்லை. பொடி போட்டு, பில்டரில் இறக்கி, அந்தப் பாலைச் சுடவைத்துக் காபி போட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/155&oldid=1049992" இலிருந்து மீள்விக்கப்பட்டது