பக்கம்:உத்தரகாண்டம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154   ✲   உத்தரகாண்டம்

புதிய டவரா தம்ளரில் ஊற்றிக் கொடுத்து அனுப்பினாள். பயந்த புறாவைப் போல் போயிற்று.

காபியைக் கொடுத்து விட்டு அவள் வரவேயில்லை. எட்டு, ஒன்பது, பத்துமணியாகிவிட்டது. இவள் அடுப்பை அனைத்துவிட்டு, பின் பக்கம் தாழ்வரையெல்லாம் சுண்ணாம்படித்த தடயங்களைத் தேய்த்துக் கழுவினாள். பால்வாங்கிக் காய்ச்சி வைத்து விட்டுக் குளித்தாள். சேலை துவைத்து உலர்த்தினாள். பழைய குழம்பும் பொரியலும் முதல் நாளிரவே கலந்து கொதிக்க வைத்திருந்தாள். சோற்றில் நீரூற்றி வைத்திருந்தாள். எந்தப் பொருளையும் வீணாக்கிப் பழக்கமில்லை. இரவுக்குள் தீர்த்து விடுவார்கள்.

பத்தரை மணி சுமாருக்கு, கலைந்த தலையும், கலைந்த பொட்டுமாகக் கீழே வந்த பெண்ணின் முகம் அழுது அழுது சிவந்திருந்தது இவளுக்குச் சொறேலென்றது.

“ஏம்மா, அழுதியா?...”

“இல்லேத்தே...” என்றாலும் பிழியப்பிழிய அழுகை வந்தது.

“அசடு, அழாத. ஒரு பொம்புளைக்கு வாழ்க்கைங்கறது இதுதா. போவட்டும்... அழுவாதம்மா!...” இதற்குமேல் எதையும் கேட்பது நாகரிகம் இல்லை.

“சரி, நீ காபி குடி, ராத்திரியே சரியா சாப்புடல. வா, முகத்தைத் துடச்சிக்க. பல்லு விளக்கிட்டு வா!”

அப்போது, மாடியில் குளியலறை இல்லை.

“சரி அத்தே...” என்று போனாள். அதிர்ந்து பேசத் தெரியாததென்பது முழுசும் உண்மை.

“இன்னைக்கு எப்ப போகப் போறான்? துரங்கி எந்திரிச்சிக் குளிச்சுக் கெளம்பறச்சே, மணி பன்னண்டடிச்சிடும். எல்லாம் தலகீழா இருக்கு...” என்று சொல்லிக் கொண்டே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/156&oldid=1049993" இலிருந்து மீள்விக்கப்பட்டது