பக்கம்:உத்தரகாண்டம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156   ✲   உத்தரகாண்டம்

சந்திரி, ஒருநாள் வந்தாள். கல்யாணத்துக்கு ஒருநாள் வந்து விட்டுப் போனாள். தோட்டத்தில் இருந்த அவள் கையைக் கழுவிக் கொண்டு பின்புறமாக வந்தாள்.

“யேய், ஜூஸ்? நீ எங்கே இங்கே? என்னமோ, பின்னணி பாடகியாகி ஒரு கலக்குக் கலக்குவேன்னே, குழம்பு கலக்கிட்டிருக்கிற?”

சந்திரி உயரமாக வளர்ந்திருந்தாள். முடியை தொள தொளவென்று பிடரியில் புரள நுனியில் மட்டும் பின்னிவிட்டிருந்தாள். செவிகளில் வளையங்கள்.

“குழம்புகலக்கினா கொறஞ்சா போயிடும்? எனக்கு சான்ஸ் கிடைச்சிடுத்துன்னு வச்சிக்க!”

“இவங்கள உங்களுக்குத் தெரியுமா சந்திரி அக்கா?”

“தெரியுமாவாவது? இவ மூணு வயசில மூக்கொழுக நின்னிட்டு அழுத போதே, இவ பின்னணி பாடகியாவணும்னு தா அழுதா...”

“ஏம்மா, சந்திரி!... யாரு?...”

“உனக்குத் தெரியாதாம்மா ? காத்தமுத்து மாம மக. இவளுக்கு எப்பம் மூக் கொழுகும். அண்ணெதா இதுக்கு ஜூஸ்னு பேர்வச்சது. சொந்த உறவுமுறைகளே தொடர்பு விட்டுப் போய்விட்டன. இவ நம்ம குருகுல வித்யாலயாவில படிச்சால்ல?...”

“படிச்சா... பிறகு படிப்ப நிறுத்திட்டு, அவம்மா, வூட்டு வேலைக்கு அனுப்பிச்சிட்டா...”

“இல்லக்கா, கார்ப்பரேசன் ஸ்கூல்ல பிறகு படிச்சேன்... கமலவேணி அம்மா வீட்லதா இருந்தே. அவுங்க பாடுற பாட்டெல்லாம் அப்பிடியே பாடுவேன். அண்ணெ எனக்கு நிச்சியமா சான்ஸ் தரதா சொல்லிருக்காங்க, புதுப்படத்துல...”

சந்திரி, அமெரிக்காவுக்குச் செல்ல வாய்ப்பு வந்திருந்த சந்தோசத்தில் மிதந்தாள். சாமான்கள் வாங்கினாள். அவளையும் கூட்டிக் கொண்டு பங்களா வீட்டுக்கு வந்து அம்மா, அய்யாவிடம் ஆசி பெற்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/158&oldid=1050002" இலிருந்து மீள்விக்கப்பட்டது