பக்கம்:உத்தரகாண்டம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14   ✲   உத்தரகாண்டம்

கட்டிடம் இடிக்கிற ஏழைக்கும்பல் குஞ்சும் குழந்தையுமா பிழைக்க வந்திருக்கு. கொண்டு கொடுங்க!” என்று திருப்பினாள்.

ஆனால் அன்று பார்த்த அந்த உருவமா? அவனா இவன்? ஐம்பதைத்தானே கடந்திருக்கிறான்? எழுபது எழுபத்தைந்து என்று மதிப்பிடும் அளவுக்கு எப்படிச் சோர்ந்து போனான்? மழையும் காற்றும் வெயிலும் புரட்டிப் போட்டதாகச் சொல்ல முடியாது. சொகுசு கார்; ஏ.ஸி. என்று ஏதேதோ சொல்கிறார்கள். உழவோட்டி, சேற்றிலும் சகதியிலும் ஊறி, கால் வயிற்றுக் கஞ்சியும் கள் மொந்தையும், பண்ணையடிமையின் உலகில் முழு வாழ்வையும் கழித்த பாட்டன் அவளுக்கு நினைவு தெரிந்து தொண்ணூறு வயதிலும் இப்படித் துவளவில்லையே?

“தாயம்மா? உங்காயா நல்ல செவப்பு. அதா நீயும் செவப்பா இருக்கிற... ஏந்தெரியுமா?” என்று ஒரு பல் தெரியச் சிரிப்பான்.

“அட, சீ! நீ எதும் பேசாதே? பச்சப்புள்ள கிட்டப் போயி இதெல்லாம் பேசிக்கிட்டு!” என்று சின்னாயி அதட்டுவாள். அந்தப் பாட்டன் பொடுக்கென்று செத்துப் போனான்.

அடிமை வருக்கம் மேல் படியில் வந்ததும், மேல் படிக்குரிய எல்லாக் கசடுகளும் படிந்து விடுமோ? அவளுக்குத் தோன்றவில்லையே? மேலும் இவன் மேல் வருக்கத்தில் தானே கண் விழித்தான்?

அவன் மோரைக் குடித்துவிட்டுக் குளிர்ச்சியை அநுபவிப்பவனாக முகம் கனியப் பார்க்கிறான்.

“பானைத் தண்ணி ஊத்திக் குடுத்தியாம்மா? என்ன இருந்தாலும் பானைத் தண்ணி சுகம் சுகம்தான். ஃபிரிடஜ்ல வச்சத எடுத்தா தேள் கொட்டுறாப்புல இருக்கும். வெளில வச்சாலும் தாகம் அடங்காது...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/16&oldid=1049381" இலிருந்து மீள்விக்கப்பட்டது