பக்கம்:உத்தரகாண்டம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158   ✲   உத்தரகாண்டம்


இவள் நிமிரும் போது, அந்தப் பஞ்சைத்தாய், இவள் காலடியில் விழுந்து கண்ணீரால் நனைக்கிறாள்.

“இந்தாம்மா எழுந்திரு...” என்று எழுப்புகிறாள். சட்டென்று அந்தப் பெரியவரின் நினைவு வருகிறது. இவள் பணம் வாங்கச் செல்லும் வங்கியில் இவர் பழக்கம். ராமலிங்கம் என்று பெயர். பென்சன் வாங்கிக் கொண்டு விட்டார். ஒரே பையன் கிறிஸ்தவப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு மதம் மாறிப் போனான்.

“...வாங்கையா எங்கே இம்புட்டுத் தூரம்? எல்லாம் நல்லாருக்கீங்களா?...”

மடமடவென்று வாளியையும் சுருணையையும் பின் பக்கம் கொண்டு வைத்துக் கைகழுவிக் கொண்டு வருகிறாள்.

“இந்த ஏழைப் பெண்ணுக்கு ஒரு வழி செய்யணும். உங்களால் தான் முடியும். இந்த அரசியல் கட்சிக்காரங்க என்ன அக்கிரமம் செய்தாலும் கேட்பார் கேள்வி இல்லேன்னு ஆயிடிச்சி. இந்தம்மா காஞ்சிபுரத்திலேந்து அவல் கொண்டு வந்து தெருத் தெருவா விப்ப. இருக்கிறது அங்கதா. வள்ளுவர் குருகுலத்துல ஒம்பது படிச்சிட்டிருந்தப்ப, ஒருநா வாத்தியார் அடிச்சாரு. காது சரியா கேக்கலன்னு சொல்றா. என்ன விசயம்னு புரியல. படிப்பு நின்னு போச்சு. ஒரு கடையில, இங்கதா மளிகைக் கடையில வேலைக்கு வச்சா. காது சரியா கேக்கலன்னு சொல்ல முடியாது. கொஞ்சம் மந்தமா இருப்பான். ஒருதரத்துக்கு ரெண்டு தரம் சொல்லணும். முதலாளி வீட்டில மாடில, கடைப்பையன்கள் அஞ்சாறு பேர்- தட்டிமாடி அங்கேயே படுத்துப்பாங்க. பின் பக்கம் வெளில வெறகு, மட்டை, அது இது வச்சி பொங்கித்திம்பாங்க. ஒரு நேரம் அப்ப ஒருநா, ஒரு கரியை வச்சிட்டு, பின் பக்க சுவரில, கிணறு, தென்னமரம், சூரியன்னு வரஞ்சிருக்கிறான். மத்தியானம் குளிச்சிட்டு, முதலாளிக்கு வீட்டிலேந்து சோறு கொண்டு போகணும். கடைக்கும் வூட்டுக்கும் சைகிள்ல போனா, பத்து நிமிசம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/160&oldid=1050006" இலிருந்து மீள்விக்கப்பட்டது