பக்கம்:உத்தரகாண்டம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    15


“உப்புத் தின்னுறவனுக்கு வெளில வச்சாலும், ஃபிரிட்ஜூக்குள்ளாற வச்சாலும் தாகம் அடங்காது?”

சுருக்கென்று ஊசிக் குத்து பாய்கிறது.

பேச்சு எழவில்லை.

ஆனால் அவள் மனம் புலம்புகிறது.

‘மேல் படி'யில் தான் அந்த அய்யா கண் விழித்தார். படிகளைத் தட்டி, எல்லோரும் சமம் என்று பெரிய கைகளை நீட்டி எல்லோரையும் அணைத்துக் கொள்ளவில்லை?

இதழ்கள் துடிக்க மேலே படங்களைப் பார்க்கிறாள்.

காந்தி...மகான் காந்தி...மகாத்துமா காந்தி... அந்தச் சொல்லின் காந்தியில், கீழ் வரிசையில் உள்ள அய்யாவும் அம்மாவும் தங்கள் வாழ்க்கையையே காணிக்கையாக்கினார்கள்.

அவர்கள் புழங்கிய மண்; தண்ணீர்...கிணறு. இன்றும் அதில் நீர் அடியில் தெரியும் பாறையைக் காட்டிக் கொண்டு பளிங்காய், ஊற்றுக் கண்களால் வாழவைக்கிறது...

“அம்மா... உன்னைக் கூட்டிட்டுப் போகணும்னு வந்திருக்கிறேன். புது வீட்டில் உன் அடிபடனும்னு கெஞ்சிக்கிறேன்...” அவள் காலைப் பிடிக்கவும் விழைகிறான்.

“ஏய், இந்தக் காலுல விழற சாகசமெல்லாம் வேணாம். நா எதுக்கு அங்க வரணும்? எனக்கு ஒரு உறவும் யாருடனும் இல்ல. நீ என் வயித்தில் குடியிருந்த தோசத்துக்கு என்னை எப்பவோ பெருமைப் படுத்தி கவுரவிச்சிட்ட. அதுவே எனக்கு இந்த சன்மம் முச்சூடும் போதுமப்பா!”

“அம்மா... நீங்க இப்படிப் பேசலாமா? அரசியல்ங்கறது, சொந்த பந்தத்துக்கு அப்பாற்பட்டது. நீங்க ஆயிரம் மறுத்தாலும், நா உங்க மகன்ங்கறது இல்லாம போயிடுமா? ரஞ்சிதம் படுபடுக்கையாயிருக்கா. அவதா அம்மாளை எப்படின்னாலும் கூட்டிட்டுவாங்க. அவங்க மனசெரியும்படி நடந்து போச்சு, வாஸ்தவந்தா. ஆனா அதுக்குப் பிறகு எத்தனையோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/17&oldid=1049383" இலிருந்து மீள்விக்கப்பட்டது