பக்கம்:உத்தரகாண்டம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    171

தான் அவள் ஆதரவு கொடுக்கும் ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினாள். ஒரு சமயம் ஒரு பெரிய வக்கீல் வீட்டில் வேலைக்கிருந்த பெண் கர்ப்பமாகிவிட்டாள். வக்கீலா, அவர் மகனா என்று அந்தப் பெண் சொல்லவில்லை. பயத்தில் உறைந்து போனாள். அம்மாதான் அவளை அந்த இல்லத்தில் கொண்டு சேர்ப்பித்தார். ‘உங்க குருகுலத்திலேயே வைத்துக் கொள்ளலாமே, சரோம்மா’ என்று அவர் கேட்டாராம்... அம்மா அய்யாவிடம் வந்து சொன்னார். “இங்கு தப்பு நடக்கக் கூடாது தாயம்மா, நீ உன் பிள்ளையைத் தாலியைக் கொடுத்து குழந்தைக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தது ரொம்ப சரி...” என்றார்.

ஆனால் தவறாக ஒரு பிள்ளைக்குத் தாயான பிறகு, மரகதம், எந்தப் பாட்டைத் தொழிலாகக் கொண்டு வாழ்க்கை நடத்த வந்தாளோ, அந்தப் பாட்டின் பக்கமே திரும்பி வைராக்கியமாக இருந்திருக்கலாம். இல்லையேல்...?

சீ! ஆண் திருந்தாமல், பெண் எங்கிருந்து வைராக்கியம் காப்பாள்? இவள் இப்போது, துப்பிய எச்சிலை எடுத்து விழுங்குவாளா? ஓர் ஏழைத்தாய்க்கு நியாயம்.

குருகுலத்தில் அடிபதித்து எத்தனையோ ஆண்டுகளாகி விட்டன. பராங்குசம் இவளைப் புல்லுக்கும் மதிக்கமாட்டான். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட, சண்டைக்காரன் காலில் விழலாம்.

அவர்களுடைய முறையீட்டை வாங்கிக் கொண்டு மகன் வீடு செல்ல முடிவு செய்கிறாள்.

பிற்பகலில் ரங்கன், மாமரத்துக்கும் தென்னமரத்துக்கும் எரு வைப்பவர் என்று ஒருவனைக் கூட்டிக் கொண்டு வருகிறான். வாசலில் ஆட்டோவில் ஒரு பாலிதீன் சாக்கில் இருந்து வெளிர் நீலப் பொடியைக் கொண்டு வருகிறார்கள். மரத்தைச் சுற்றிக் கொத்தித் துரவுகிறார்கள்.

இவளுக்குச் சும்மா இருக்க முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/173&oldid=1050027" இலிருந்து மீள்விக்கப்பட்டது