பக்கம்:உத்தரகாண்டம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16   ✲   உத்தரகாண்டம்

மாறிப்போச்சி. நேத்து பரம விரோதியா இருந்தவன்லாம், இன்னைக்கு அரசியல் மேடையிலே கட்டித் தழுவி சொந்தம் கொண்டாடுறா. தாய் மகன் தொடர்பு, பெத்த மக்கள் தொடர்பு விடுமா, விடாது...” என்று என்னைக் கட்டாயப் படுத்தி அனுப்பிச்சிருக்கா... அவ பேச்சுக்கு மதிப்புக் குடுக்கக் கூடாதா?”

அவள் பார்க்கிறாள். இவன் மகா சாமர்த்தியக்காரன். நாடகம், வசனம், சினிமான்னு ஊறியவன். அரசியலில் சூது வந்திட்டதுன்னு, அன்றைக்கு அய்யா உதறித்தள்ளினார். அந்த அரசியல் மக்களை நல்ல மனிதர்களாக்கும் ஒழுக்க இலட்சியத்தை முதலில் வைத்தது... இவர்கள் அடிப்படையே வேறு தூ...! மனசுக்குள் காறி உமிழ்ந்து கொண்டு அவள் சமையலறைப் பக்கம் திரும்புகிறாள்.

“அம்மா... அம்மா...”

அவன் அவள் பின் வந்து காலடியில் விழுகிறான்.

“இதபாரு. இந்த நடிப்பெல்லாம் எனக்கு வேண்டாம். என்னால் இந்த நிழலை விட்டுவர முடியாது...”

தொண்டை கம்மி, கண்கள் கலங்குகின்றன.

“சரி, அதைப்பத்தி நா இப்ப எதும் பேசல. பேயானாலும் தாய்ம்பாங்க. ரஞ்சிதத்துக்கு நாளைக்கு ஆபரேசன்... அதுக்கு முன்ன உங்களைப் பார்க்கணும்னு சொல்றா...”

அப்படி உருகுபவள் என்றேனும் வண்டியெடுத்துக் கொண்டு வந்திருக்கலாமே? இனி என்ன ஆபரேசன்? முப்பத்திரண்டு வயசிலேயே கர்ப்பப்பையை எடுத்துப் போட்டாயிற்று. பெரிய பையனே அப்பனின் வாரிசாக சரித்திரம் பண்ணிக் கொண்டிருப்பதாக அவள் செவிகளில் விழுகிறது- அடுத்த பெண்தான் மஞ்சு. இரண்டுக்கும் ஒரே மாசம்தான் வித்தியாசம். அது பதினெட்டாகுமுன் ஒரு காதலில் விழுந்து, வயிற்றில் வாங்கிக் கொண்டு, கல்யாணம் பண்ணினார்கள்... அது என்னவோ டிவோர்சாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/18&oldid=1049386" இலிருந்து மீள்விக்கப்பட்டது