பக்கம்:உத்தரகாண்டம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    181


இவள் மூச்சடைக்க நிற்கையில், மின்னும் காசாய பட்டு ஜிப்பாவுடன், அதே பட்டு வேட்டியும், வெளியில் துலங்கும் உருத்திராட்ச தங்க மணிகளும் மார்பில் புரள, பிடரியில் விழும் எள்ளும் அரிசியுமான முடி தாடியுடன் அவன்... பராங்குசம் இறங்குகிறான். நல்ல கருப்பில், சேலை உடுத்திய பருமனான ஒரு பெண், சிவந்த கழுத்தில் மெல்லிய சங்கிலியில் கோத்த சிலுவை, வயிரத் தோடுகள், புதையப்புதைய வெள்ளை மஸ்லின் ரவிக்கை...

“அம்மா எப்படி இருக்கிற? ரெண்டு மாசம் முன்ன நீ வந்திருந்தியாம், உடனே போயிட்டியாம். மஞ்சு சொல்லிச்சி. எனக்கும் உன்னை ஒரு நடை வந்து பார்க்கணும்னதா, மகளிரணிப் பொறுப்பு வந்த பிறகு நிக்க நேரமில்ல. எப்படியோ பொழுது ஓடிப் போயிடுது. எனக்கும்” சந்திரி முடிக்கு முன் “போதும்” என்று சொல்வது போல் கையைக் காட்டுகிறாள்.

அவள் மகன் வீட்டு பந்தம் நினைக்கவே கசப்புப் பந்தாகத்திரளுகிறது. இவள் அங்கு சென்று வந்தபின் மகன் மாரடைப்பு வந்து ஆஸ்பத்திரியில் படுத்திருந்ததாகச் செய்தி வந்தது. குழந்தைவேலுவே வந்து சொன்னான். இவள் அசையவில்லை.

“அம்மா, எப்படி இருக்கிறீங்க..?”

பராங்குசமா, அம்மா என்று கேட்டு, கை குவிக்கிறான்? இது கனவா நினைவா? ஒருகால் தேர்தலுக்கு நிற்கிறானா? “தாயி, மாடிய வந்து பெருக்கிட்டுப்போ! துடப்பம் எடுத்திட்டு வா? இங்க ஏன் நிக்கிற, போ!” என்று பேசிய பராங்குசமா? காசாயத்தின் மர்மம் என்ன? அந்தக் காலத்தில் நாடகங்களில் ஆசாடபூதி வேசம் கட்டுவார்கள் அப்படியா?...

இவள் திகைத்து நிற்கையில் அந்த அரும்பு மீசை இவள் காலைத் தொட்டுக் கும்பிடுகிறது. அந்த லோலக்கு சுந்தரியும் அதைச் செய்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/183&oldid=1050052" இலிருந்து மீள்விக்கப்பட்டது