பக்கம்:உத்தரகாண்டம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182   ✲   உத்தரகாண்டம்


“என்னம்மா, திகச்சிப் போயிட்டீங்க? இவ என் மக அர்ஷிதா. யு.எஸ்.ல மெடிசின் முடிச்சிட்டு வந்திருக்கா. இவன் தமிழ்ச் செல்வன், ரஞ்சிதத்தின் இரண்டாவது பையன். என்ஜினிரிங் முடிச்சிட்டு, நம்ம கம்பெனிலியே இருக்கிறான். கூடப்படிச்ச சுதாவயே கட்டிக்கிட்டான்...”

“ஏம்மா வாசல்லியே பேசுறிங்க? உள்ள வாங்க. எல்லாம் உள்ளே வாங்க... அம்மா, வாங்க!” மேலிருந்து விரிசமக்காளம் தட்டிப் போடப்பட்டிருக்கிறது.

“உக்காருங்க. முன்னமே ஒரு ஃபோன் போட்டு...” என்று ரங்கன் சொல்லும் போதே, இன்னொரு மஸ்லின் ஜுப்பா, உருத்திராட்சம் வருகிறது. பள்ளிக் கூடத்துப் பத்மதாசன்.

“அடாடா... வாங்க, வாங்க ஸார், வணக்கம்...”

“நமஸ்காரம். சாமிஜிய நம்ம ஸ்கூல்ல ஒரு நாள் சிறப்புச் சொற்பொழிவுக்குக் கூப்பிடணும்னு அப்பாயின்ட்மெண்ட் நேரம் கேக்க நேத்துக்கூட ஃபோன் போட்டேன்...”

“...நா இப்பல்லாம் குருகுலம் சென்டரில இருக்கிற தில்ல- சாமிஜி ஆசிரமத்திலதான் என்ன இருக்கும்படி உத்தரவு. இன்னைக்குக்கூட அவங்க அனுமதியில்தான் வந்திருக்கிறேன்... எல்லாம் இவங்கதான் நிர்வாகம். டாக்டர் எமிலி, லட்ச லட்சமா புரளும் டாக்டர் தொழில வுட்டுட்டு, இங்க கல்விச் சேவைக்காக வந்து வாழ்க்கையையே கொடுத்திருக்காங்க. இதும் சாமிஜியின் ஆணைதான்.”

அந்தப் பூசணி முகம் கை குவிக்கிறது.

இதற்குள் ஓராள் ஆப்பிள் ஆரஞ்சு மலை வாழை அடங்கிய தட்டு, பெப்சி, கோலா, பான வகைகள் எல்லாம் கொண்டு வந்து வைக்கிறான்.

அவள் சுவரில் இருக்கும் அந்தப் படங்களை நிமிர்ந்து பார்த்த வண்ணம் சுவரோடு சாய்ந்து நிற்கிறாள். கண்களில் நீர் மல்குகிறது. ராஜலட்சுமி சொன்ன செய்திகள் முட்டுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/184&oldid=1050053" இலிருந்து மீள்விக்கப்பட்டது