பக்கம்:உத்தரகாண்டம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186   ✲   உத்தரகாண்டம்

சேவை செய்யணும்னாங்க. இப்ப, நகரத்தில் மூலைக்கு மூலை ஆஸ்பத்திரி இருந்தாலும், நோய்க்கூட்டம் பெருத்துப் போச்சு. இப்ப இந்த இடம் முழுதுமாக, எல்லா வசதிகளையும் அடக்கிய நவீன சிகிச்சைகள் செய்யுமளவுக்கு ஒரு ஆஸ்பத்திரி கட்டணும்னு இருக்கிறோம்...” அவன் நிறுத்துகிறான்.

சந்திரி தொடருகிறாள். “ஆமாம்மா. இப்ப தம்பி, ‘ஹார்ட்ஃபெய்லியர்’ன்னான பிறகு பிழைச்சு நடமாடுறான்னா, அது நவீன மருத்துவம்தான். அமெரிக்காவுல இருக்கிற மாதிரியே அத்தனை வசதிகளுடன், அங்கேயே பயிற்சி பெற்ற டாக்டர்கள், அதுக்கு வேண்டிய சாதனங்கள் எல்லாம் வரவழைச்சி உருவாக்கும் திட்டத்தில இறங்கி இருக்கிறாங்க. என்னிக்கிருந்தாலும், உங்களுக்கும் வயசாவுது எண்பதுக்குமேலே ஆயிட்டுது. எதுக்கு இங்கே கஞ்சி காச்சிக் குடிச்சிட்டுத் தனியே இருக்கணும்?... சொல்லுங்க?”

தாடி உருவல், அவளுக்கு மிக அருவருப்பாக இருக்கிறது. “நீங்க உங்க மகன் வீட்டுக்குப் போக இஷ்டப் படலன்னா வேணாம். பேசாம, குருகுலம் ‘கார்னரில்’ உங்களுக்குன்ன ஒரு ரூம் வசதியா, இப்படியே காந்திபடம், அய்யா படம் மாட்டி, வச்சிக் குடுத்துடறோம். உங்களுக்கு என்ன வசதி வேணுன்னாலும் அப்படி...”

அவளுள் ஒரு பிரளயமே நடக்கிறது.

‘தாயம்மா, சத்தியம் மயிரிழை போல் இருந்தாலும் அதன் வலிமை பெரிது. விடாதே. அந்தக் கல்விச்சாலை போல்தான் இந்த ஆஸ்பத்திரியும் இயங்கும். எந்த ஏழைக்கும் இங்கே இடம் இருக்காது. ஜயந்தியின் பழைய வீட்டில், அந்த கிறிஸ்தவ டாக்டர், தொள தொளவென்று வெள்ளைச்சராய் போட்டுக் கொண்டு வரும் பஞ்சைப் பராரிகளுக்கு வைத்தியம் செய்கிறாரே, அதற்கு மாற்றில்லை இது. இது முதலைகளுக்கு...’

“என்னம்மா? யோசிக்கிற ? இப்ப உலகமுச்சூடும், ரொம்ப வேகமா வளர்ச்சியும் மாறுதலும் வந்திருக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/188&oldid=1050058" இலிருந்து மீள்விக்கப்பட்டது