பக்கம்:உத்தரகாண்டம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    189


குறைந்தபட்சம் மன வேதனையைச் சொல்லிக் கொள்ளக் கூட யாரும் இல்லை. அந்தத் தலைமுறையே பட்டுப் போய்விட்டதா? புதிய தளிரே வராதா?...

கடைசி காலத்தில், அய்யா, மன உளைச்சலோடு உடலும் பாதிக்கப்பட்டிருந்தார். நோயென்று எதுவும் இல்லாமலே படுக்கையோடு இருக்க வேண்டிய அளவுக்கு நலிந்து போனார். ஆதிநாட்களில் அக் குடும்பத்தில் சமையல்காரராக இருந்த சிங்காரம் அம்மா இறந்தபின் வந்திருந்தான். என்றாலும், அவனுக்கும் வயதாகி கண் பார்வை மங்கி இருந்தது. “தாயம்மா, நா அடுப்பு வேலய பாத்துக்கிறேன், கஞ்சியோ, இட்டிலியோ எதுன்னாலும் செய்துதாரேன், மத்ததெல்லாம் நீ பாத்துக்க” என்று சொல்லி விட்டான்.

குளிக்க நீர் எடுத்து வைத்து, துண்டு, வேட்டி வைத்துப் பணி செய்வது, அவரைக் கை பிடித்துக் குளியலறைக்குக் கூட்டிச் செல்வதாயிற்று. குச்சியை ஊன்றிக் கொண்டு வீட்டைச் சுற்றி, எதிரே விரிந்த தோப்புத்திடலில் அவர் காலையில் நடந்தால் இவள் உடன் செல்வாள். இந்த நடமாட்டமும் குறைந்து, இறுதியில் வீட்டோடு முடங்கி, படுக்கையிலும் தள்ளிவிட்டது. அப்போது காமத் டாக்டர் இருந்தார். பர்மாலட்சுமியின் தம்பி நிரஞ்சன், இவர்கள் எல்லோரும் வருவார்கள். பிடிவாதமாக மருந்து சாப்பிட மறுத்துவிட்டார். பர்மாலட்சுமி, தீங்குரலில் பாடுவாள். ‘மந்திரமாவது நீறு; வானவர்தாமுள நீறு’ என்று அவள் பாடும் போது கண்களில் எல்லாருக்குமே நீர் கசியும்.

அவர்கள் வந்து சென்றதும், “தாயம்மா...” என்று கூப்பிடுவார். குரல் தழுதழுக்க, என்னைத் தூக்கி விடுறியா? என்பார். முதுகில் திருநீற்றைத் தடவுவாள். படுக்கை யோரத்தில் வேப்பிலைதான் வைத்திருப்பாள். அவர் எழுந்து இயற்கைக் கடன் கழிக்கும் பாண்டத்தில் அமரும்போது அவள் உதவ வேண்டி இருக்கும். ஏறக்குறைய ஒரு மாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/191&oldid=1050061" இலிருந்து மீள்விக்கப்பட்டது