பக்கம்:உத்தரகாண்டம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    191

கழிவுகளை இவர்கள் வீட்டின் இன்னொரு பக்கத்தில் குவியலாகப் போடுகிறார்கள். அங்கேயே எங்கோ அடுப்பு மூட்டியோ காஸ் கொண்டு வந்தோ காலைப் பலகாரம் செய்து சாப்பிட்டபின் அந்த எச்சில் இலைகளும் கழித்த வாழைக் குவியல்களில் விழுகின்றன. பின் பக்கமும், கிழக்கேயும் உருவாகும் குடியிருப்புகளுக்குச் செல்லும் வழித்தடம் அது. இன்னமும் அதிகார பூர்வமான வழித்தடமாகவில்லை.

எப்போதும் போல் ரங்கன், பின்புறம் மாட்டுக்கு வைக்கோல் உதறிப் போட்டுவிட்டுப் பின் கதவைப் பூட்டிக் கொண்டு சாவியை மாட்டுகிறான். பிறகு போகிறான். இப்போதெல்லாம் அவன் எதுவும் பேசுவதில்லை.

பாட்டொலியும் பஜனையின் சரணக் கூவலும் மண்டை கனக்கச் செய்கின்றன. அய்யா காலத்திலும் இது போன்ற பூசை உண்டு. மணிக் கூண்டுக்குப் பக்கத்தில் ஐயப்ப பக்த சமாஜம் கட்டுவதற்காக ஓமியோபதி டாக்டர், சிவராமன் அன்பளிப்பு வாங்கிச் சென்றதும் கூட நினைவிருக்கிறது. அவரே இங்கும்கூட வெள்ளிக்கிழமை பஜனைக்கு வருவார்... இப்போது அவர் குடும்பமே இங்கு இல்லை... காவி, கருப்பு, பக்தி, வாழ்வு, எல்லாமே, இலக்கு எது என்று தெரியாமலாகிவிட்டன...

ராதாம்மா சீக்காகப்படுத்திருந்த நாட்களில், அம்மாவும் அய்யாவும் இங்கே சேர்ந்தாற்போல் ஒரு மாதம் கூடத் தங்கியதில்லை. மாற்றி மாற்றி இரத்தம் கொடுக்கும் நோயாக இருந்தது. அவர்கள் ஒரு சமயம் அவசரமாக விமானத்தில் பம்பாய் கிளம்பும் நேரத்தில், பராங்குசம் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தான். முடியை முழுசாக வெட்டிக் கொண்டு காதில் ஒரு சிறு சிவப்பு நட்சத்திரம் மின்ன, மெலிதான ஒரு நூல் சேலை உடுத்திக் கொண்டிருந்தாள்... நெற்றியில் சிறு குங்குமப் பொட்டு. “என்னைத் தெரிகிறதா மாமா?...’ என்று இருவர் கால்களையும் தொட்டுக் கும்பிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/193&oldid=1050064" இலிருந்து மீள்விக்கப்பட்டது