பக்கம்:உத்தரகாண்டம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194   ✲   உத்தரகாண்டம்

பார்த்துவிட்டு நடையைப் பெருக்கிச் சுத்தம் செய்தாள். அப்போது அவர் கிணற்றில் இருந்து நீரிறைத்து அங்கேயே நீராடலானார்.

“அம்மா, ரூமில் தொட்டில தண்ணீர் இருக்கே?” என்று மெதுவாகச் சமையலறையில் வந்து தெரிவித்தாள்.

அம்மா பேசவில்லை.

அவருக்கு அறுபது வயசுக்கு குறையாது. நல்ல உயரம். குளித்து முடித்து துண்டை உடுத்த கோலத்தில் தம் சட்டை, வேட்டி எல்லாம் சோப்புப் போட்டுத் துவைத்து ஓரமான கொடியில் உலத்தினார். பிறகு, நின்ற கோலத்தில், கண்களை மூடி தியானம் செய்தார். இவள் குளிப்பறை வாயிலிலேயே நின்றாள். முற்றத்துக்கு வராமல் பிறகு தண்ணீரை எடுத்து இரு கைகளாலும் சூரியனை நோக்கிக் காட்டி விழச் செய்தார்...

அம்மா உள்ளே காபி வடிகட்டிக் கொண்டிருந்தார். அய்யாவும் நடை வழியாகப் பின்புறம் சென்ற போது, இவள் கேட்டாள்.

“எதுக்கம்மா அப்படித் தண்ணியை மேலே காட்டி, விடுறாங்க?”

“சூரியனுக்கு அர்க்கியம் விடுவதாகச் சொல்வாங்க. வடக்கே பெண்கள்கூட இதைச் செய்வாங்க. தாயம்மா... சந்நியாசிகள் நெருப்பு மூட்ட மாட்டார்கள். ஏன்னா, அவங்களே நெருப்புன்னு அர்த்தம். அதுக்குத்தான் காவி உடுத்துறாங்க. எல்லா ஆசைகள், பந்தங்கள் பொசுங்கிய நெருப்பு...”

அவள் எதுவும் சொல்லவில்லை. அவர் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது. கூடத்தில் வந்து வானொலிச் செய்தியைக் கேட்டார் அவர். அம்மா, பின்பக்கம், அய்யாவிடம், “யாருன்னு தெரியல, இங்க வந்திருக்காரே?” என்று மெதுவாகக் கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/196&oldid=1050070" இலிருந்து மீள்விக்கப்பட்டது