பக்கம்:உத்தரகாண்டம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198   ✲   உத்தரகாண்டம்


அவளுக்குப் புரியவுமில்லை; புரியாமலும் இல்லை. காந்தியைச் சுட்ட கட்சி. ஆனால் அப்போதெல்லாம், இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போதென்ன கெடுபிடி?... இவளுடைய பையன் வீட்டிலும் கூடச் சோதனைகள், அதிரடி நடவடிக்கைகள், சிறை என்று பராபரியாகக் கேள்விப் பட்டிருந்தாள். வானொலி இருபது அம்சத்திட்டப் பாடல்களும் கிளிப் பிள்ளைச் செய்திகளுமாக அவிழ்க்கின்றன. பட்டென்று மூடுகிறாள். அவள் மகன் வீட்டில் சோதனை, காவல், சிறை என்ற செய்தியில்கூட அவளுக்குச் சங்கடம் அழுத்தவில்லை. ஏனெனில் அவர்கள் உப்பைத் தின்பவர்கள், தண்ணீர் குடிக்கிறார்கள் என்று பதிவாகி இருக்கிறது. காலையில் நீராடி, சூரியனுக்கு அர்க்கியம் விட்டு... பிராமணர்... பிராமணர்களை அடி உதை என்று கட்சி கட்டிய நாட்களில்கூட, அதற்குச் செயல் வடிவம் வரவில்லை. அந்தப் பகுத்தறிவுப் பெரியாரும், எதிர்துருவமான ராஜாஜியும் இதயம் தொட்ட நண்பர்களாகத்தானே இருந்தார்கள்?... இந்த சந்நியாசி என்ன செய்துவிட முடியும்?

அவர் மாலை ஆறுமணிக்குத்தான் உறங்கி எழுந்து வந்தார். கிணற்றடிக்குச் சென்று தூய்மை செய்து கொண்டு கூடத்துக்கு வந்தார்.

“யார் வந்திருந்தார்...?” என்று அய்யாவிடம் கேட்டார். அங்கே அநு தவறவிட்டிருந்த வெள்ளைக் கைக் குட்டை கிடந்தது.

“நல்லாத் தூங்கிட்டீங்க போலிருக்கு ?”

“ஆமாம். ஒரு வாரமாத் தூங்காத, ஓய்வெடுக்க முடியாத நடை, அலைச்சல். உங்கள் மகள் தவறிவிட்டதைக் கேள்விப்பட்டேன்... அநுதான் சொன்னா. பாத்துட்டுப் போகலான்னு வந்தேன். கன்யாகுமரி போறேன்” என்றார்.

அம்மாவும் அய்யாவும் பேசவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/200&oldid=1050078" இலிருந்து மீள்விக்கப்பட்டது