பக்கம்:உத்தரகாண்டம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   199



இவள் சமையலறை வாசற்படியில் நின்றாள். அம்மா விளக்கேற்றினார். கீதை தியான சுலோகம் சொன்னார். கண்களை மூடி மவுனப் பிரார்த்தனை செய்தார்கள்.

இரவு கஞ்சி அருந்தும் போது,

“அநு வந்திருந்தாளோ?” என்று கேட்டார்.

இவர்கள் ஏதும் விடையளிக்கு முன் அவரே, “நான், நீங்கள் அங்கே இருப்பீர்கள் என்று போனேன். பிறகுதான் தெரிந்தது. இங்கே வந்தேன். ரெண்டு நாள்... தங்கலாமா?”

“தாராளமா... உங்களை அது கல்யாணத்தில் பார்த்தது.”

“ஆமாம்... அப்ப பங்களாதேஷ்... அது ரொம்ப விவேகமாகச் செய்தா... இப்ப இது விவேகம் இல்ல. பயம்... எல்லாம் பயம், ஆசை, அதீதமான ஆசை; பயம்...”

யாரைச் சொன்னார், எதற்குச் சொன்னார் என்று அவளுக்குப் புரியவில்லை...

“பாவம் அநு. இந்த வயசில் குழந்தையை வச்சிட்டுத் தனியாக...”

“அதென்னமோ, ராதா போனபிறகு, இப்ப இவ வந்து அம்மா, அப்பான்னு பழகுவது மனசுக்கு ஆறுதலாக இருக்கு.”

“அந்தப் பையன் நல்லவன். ஏர்ஃபோர்ஸ் எல்லை, நெருக்கடின்னு வாழ்க்கை. இளவயசுப்பிடிவாதம், வீம்பு. ரெண்டுபேருக்கும் பொருந்தல. அவன் அம்மா அப்பா ரெண்டு பேரும், ருஷிகேசத்திலதான் இருக்கா. இவ டிவேர்ஸ் அது இதுன்னு குழந்தையத் தூக்கிட்டு நாக்பூர் வந்திட்டா. எனக்கு இப்ப அவகிட்ட இதெல்லாம் பேச சந்தர்ப்பம் இல்ல. இங்க இருக்கட்டும். பத்திரம்தான்...”

யாருமே பேசவில்லை...

அந்த நெருக்கடி காலத்தின் ஒரு முகத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/201&oldid=1050080" இலிருந்து மீள்விக்கப்பட்டது