பக்கம்:உத்தரகாண்டம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   203

சாலையில் இருந்து அந்தக் கோயிலுக்குச் செல்ல ஒழுங்கான வழியும், பூச்செடிகளும் அமைந்திருக்கின்றன. சட்டென்று இடது கைப்பக்கம் பார்க்கிறாள். பசிய மரங்கள் தெரிகின்றன. சாலையின் எல்லையில் பாதுகாப்பான முட்கம்பி வேலிக்குள், சிவந்த தெச்சிப்பூக்கள் குலுங்கும் பசுமையான அரண். பெரிய எழுத்துக்களில் ‘சிவசக்தி ஆசிரமம் பசுஞ்சோலை’ என்று எழுதப்பட்டிருக்கிறது. பெரிய வாயிலின் அகன்ற கதவுகள் திறந்திருக்கின்றன. உள்ளே, மிக அமைதியான சூழல், மாமரங்களில் பூமித் தாயைப் பாதுகாக்கும் பசுங்குடைகள் போல் சூழ்ந்திருக்கின்றன. இன்னும் பூக்கத் தொடங்கவில்லை. மிகப்பெரிய பரப்பு. பல்வேறு வண்ண மலர்களின் தோட்டம்.

ஆங்காங்கு ஒன்றிரண்டு பேர் தோட்ட வேலை செய்பவர் தெரிகின்றனர்... பாதையில் அம்புக்குறி காட்டும் இலக்குகள். சிவசக்தி ஆலயம்... கிணறு... பொதுக்குடில்...

“ஆச்சி, காஞ்சி ரோடில சிவசக்தி ஆசிரமம்னு ஒண்ணு இருக்குதாம். மனசுக்கு ஆறுதலா இருக்குமாம். ரொம்ப அழகா, அம்பாளின் பதினாறு வடிவங்களை அமைச்சிருக்காங்களாம். ஒருநா போவலாமா? வரியளா?”

சங்கரி... சங்கரி... நீ இங்கு வந்தாயா?...

ஒரு கால் இங்கு இருப்பாளோ? கேள்விப் பட்டதெல்லாம் பொய்யாகப் போகட்டும்.

சங்கரி... உடன் பிறந்தவனின் குடும்பம், மக்கள் என்று உழைக்கவே, அக்கினிமேல் நின்று தவம் செய்தாயே அம்மா?...

நெற்றியில் திருநீறும், கீழே குங்குமமும் துலங்கும் முகமும் ஒடிசலான, மாநிறமேனியில் கழுத்து மூடிய ரவிக்கையும் கைத்தறிச் சேலையுமாக அவள் “ஆச்சிம்மா!” என்று கூப்பிடுவதுபோல் தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/205&oldid=1050135" இலிருந்து மீள்விக்கப்பட்டது