பக்கம்:உத்தரகாண்டம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    19

ஊரைவிட்டு வந்து குடியேறினாங்க...” என்று அய்யா படுக்கையோடு விழுந்த நாட்களில் அந்தக் கதை எல்லாம் சொல்வார். பதினாறு வயதில் கல்யாணத்தைப் பண்ணி வைத்து, பையனை மேல் படிப்புக்கு வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கனவு கண்ட அப்பாவைமீறி, அவர் கனவைப் பொய்யாக்கினார். காங்கிரசில் சேர்ந்து கதர் உடுத்தும் விரதம் ஏற்றதும், கள்ளுக்கடை மறியல், தீண்டாமை ஒழிப்பு என்றெல்லாம் மகன் அன்றைய நடைமுறை சட்ட திட்டங்களை உடைத்தார். இந்த வீடு, அவரை மணம் புரிந்த பத்தினி தெய்வத்துக்குச் சொந்தமானது. அந்நாளில் அரிசி மண்டி மொத்த வியாபாரம் செய்த குடும்பத்தின் ஒரே வாரிசு. ரங்கூனில் இருந்து வேர்பற்றிய குழந்தையும் குட்டியுமாக வந்த குடும்பங்களை வரவேற்று ஆதரித்த காலத்தில் கட்டப்பட்ட வீடு. தாயம்மாவுக்கு அப்போது இருபது இருபத்திரண்டு பிராயம் இருக்கும். பானை பானையாகப் பொங்குவார்கள். பெரிய துண்டுகளாகக் காய்களை நறுக்கிப் போட்டு, பருப்புடன் வேக வைத்துக் குழம்பு காய்ச்சுவார்கள். இந்தக் கிணற்று நீரை இரைத்து இரைத்து சந்தோசமாக மனித நேய அநுபவங்களைக் கொண்டாடிய காலம் அது. அம்மாவும் அய்யாவும் சேர்ந்து ஈடுபட்ட பெரிய தொரு கொண்டாட்டம் அது. நெருப்பு எரிந்து கொண்டே இருக்கும். சாதி மதம், ஏழை பணக்காரர் என்று பாராமல் வயிற்றுப் பசியை அவிக்கும் நெருப்பு அது.

ஆனால் இப்போது இவள் மன நெருப்பை அவிக்க எந்த வழியும் தெரியவில்லை.

“நம்ம தாயம்மாவுக்குப் புள்ள பெறந்திருக்கு. முதரெண்டும் பொண்ணுன்னு இருந்திச்சி. இப்ப பையன்...”

நாட்டுப் பிரிவினையின் போது, காந்தி மகான் தன்னந்தனியாகக் கலவரப்பட்டு வெட்டும் குத்துமாக இருந்த இடங்களில் செருப்பில்லாமல் நடந்தாரென்று, அய்யாவும் அங்கெல்லாம் சென்று பார்த்துவிட்டு வந்திருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/21&oldid=1049391" இலிருந்து மீள்விக்கப்பட்டது