பக்கம்:உத்தரகாண்டம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    227

தங்கியிருக்கிறேன். நா வரேன், நாளைக்கு. நீங்க மறுக்க ஊசி போட்டுக்கணும்” என்று சொல்லிவிட்டு எழுந்திருக்கிறான்.

“இரப்பா ஏ, இங்க ரா தங்கக்கூடாதா? இப்ப கூட அவதூறு கட்டுவாங்கன்னு பயமா?...”

“பயந்துகிட்டு ஓடல. இன்னும் கொஞ்சம் விவரம் விசாரிக்க வேண்டியிருக்கு வரேன்...”

அவன் சென்ற பிறகு, அவளுக்கு கையகல இருளை விரட்டியடித்த ஒளித்திரியும் அணைந்துவிட்டாற்போல இருக்கிறது.

பராங்குசத்தின் அசாத்திய வாதனைகளால் மட்டும் அவன் காயப்பட்டிருக்கவில்லை.

சங்கரி விசயத்திலும் காயப்பட்டிருக்கிறான்.

‘அடியாள் சங்கரி’ என்னை உடனே வந்து ஏற்றுக் கொள்ளவேண்டும்; பாதுகாவலில்லை...

அப்படி என்றால், இவன் அவளைத் திருமணம் செய்து கொண்டானா? வரதட்சணைக்கோ எதற்கோ அவளை இம்சைப்படுத்துபவன் இல்லை. இவனைச் சேர்ந்த தாயும் அப்படிப்பட்டவள் இல்லை... நினைத்துப் பார்க்கிறாள். சங்கரியின் கழுத்தில் தாலிச்சரடு இருந்ததாகத் தெரியவில்லை. ஒரு சிறு மண்பவழ மாலை மட்டுமே தெரியும். கழுத்து இறங்காத ரவிக்கை; விலகாத மாறாப்புச்சேலை. தலைப்பு, தொங்காது. இழுத்து மடி உடுத்தி இருப்பாள்...

அவன் மறுநாள்தான் அவளை ஊசிபோட, வந்தழைத்துச் செல்வதாகக் கூறி இருக்கிறான்.

ஆனால், ஒருகால் வருவானோ என்று வாசலிலேயே நின்று பார்க்கிறாள்.

ஓடுகள் எடுத்த பிறகு அந்த வீடு இடிக்கப்படுகிறது.

குழந்தைவேலு வருகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/229&oldid=1050175" இலிருந்து மீள்விக்கப்பட்டது