பக்கம்:உத்தரகாண்டம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234   ✲   உத்தரகாண்டம்


“அம்மா, சங்கரியைத் துடிதுடிக்க வதைத்து அழித்தவன் நான், நான்தான். பாவி, ஆண் என்ற கருவம், இறுமாப்பு. அகங்காரம். சாந்தி, சத்தியம், அஹிம்சை, பிரம்மச்சாரியம் எல்லாமே ஆண் அகங்காரங்கள்... இவனுக்குத்தான் பிரம்ம சாரியமா? அவளுக்கும் உண்டு. ஆனால், இந்த ஆண் வருக்கம் அவளை விடுவதில்லை. அபலையாக என்னிடம் புகலிடம் கேட்டாள். ஒரு பெண்ணாகப் பிறந்த குற்றத்துக்காகவே, ... ஐயோ, ஐயோ” என்று அறைந்து கொள்கிறான்.

அவள் அவன் கையைப் பற்றி இதம் செய்கிறாள். நெற்றிப் பொட்டைத் தடவுகிறாள்.

“தம்பி, நீ தெரிந்து செய்யல. வருத்தப்படாதே. எதுவும் நம் இச்சையில் நடக்கவில்லை. விதியின் கை என்று நீதானே சொன்னாய்? ஆறுதல் கொள்...”

24

குருகுலத்தில் இருந்து சென்ற சுப்பய்யா, புனேயில் ஒரு வித்யாலயத்தில் இந்தி கற்பிக்கச் சேர்ந்தான். தமிழர் அதிகமாக வசிக்கும் பேட்டை ஒன்றில், ஒரு வீட்டு மாடியறையில் குடியிருந்தான். அவர்கள் தாம் அந்தப் பகுதிக்குச் சொந்தக்காரர். கீழ்த்தளத்தில்தான் சங்கரியின் அண்ணன் குடும்பம் இருந்தது. வாயில்புறம் கடப்பைக் கல் வரந்தாவில் மரத்தாலான மாடிப்படி. வராந்தாவில் இருந்து நேராகத் தெருவுக்குக் குழந்தைகள் போக முடியாதபடி, கம்பியழிப் பாதுகாப்பும் கதவும் இருந்தன. அந்த வீட்டுப் பின்புறம் செல்ல, பின்புறம் முற்றத்துக்குக் கொண்டு செல்லும் படிகளும் இருந்தன. அது மராத்திய தம்பதியின் பகுதியில் இருந்தது. முற்றத்தில் தகரக்குடிசைகளில் சில எளிய குடும்பங்கள் இருந்தன. இடையில் பெரிய பொதுத் தண்ணீர்த் தொட்டி; குளிக்க, துவைக்க வசதிகள். சுப்பய்யா அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/236&oldid=1050235" இலிருந்து மீள்விக்கப்பட்டது