பக்கம்:உத்தரகாண்டம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238   ✲   உத்தரகாண்டம்

ரசஞ்சோறு தவுர எதும் குடுக்காதன்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. காலம எந்திரிச்சி பேடா வோணும் சேவு வோணும்னு தொந்தரவு பண்ணுனா. ரெண்டு கிண்ணத்துல போட்டுக் குடுத்தே. திங்கியவுமில்ல. வாரி எறச்சிருக்கா... இப்ப கைப்பருப்பு இடுக்கிலேந்து நழுவி, இவகையில கொட்டிடிச்சி... தேங்காண்ணை ஒறஞ்சி கெடக்கு. என்ன பண்ணுவே...” என்று சங்கரி பிரலாபிக்கும் குரலில் விசிறிக் கொண்டிருந்தாள்.

“இப்படிப் புள்ளிகள வுட்டுப்புட்டு பெரிச மட்டும் கூட்டிட்டு இவுங்க போயிடறாங்க. சங்கரி, தோசமாவு இருக்கில்ல, பூசு... வாடிகண்ணு, பாட்டி விசரறேன்...”

அந்த நேரத்தில்தான் அவன் சென்றான்.

“என்னம்மா? என்ன ஆச்சி?...”

“அத்தே... அத்த... பருப்பக் கொட்டிட்டா... அடுப்பி லேந்து கொட்டிட்டா...”

“அடி செருப்பால, கேக்குறவங்க என்ன நெனப்பாங்க? அம்மயோட துக்கிரித்தனம் அப்பிடியே வருது?” என்று பாட்டி பாய்ந்தாள்.

“அம்மா நீ எதுக்கு இப்பிடி எல்லாம் பேசுற? புள்ளக்கு வலி எரிச்சல்...”

தோசை மாவை எடுத்து வந்து அவள் போட முனைந்த போது, அவன் பாட்டியின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த குழந்தை பவானியைப் பார்த்தான்.

புறங்கை, பிஞ்சு விரல்கள், மணிக்கட்டுப் பின்புறம், முழங்கைக் கீழ்ப்பகுதிகளெல்லாம் சிவந்து ரணம் பட்டிருந்தது. “தோசை மாவெல்லாம் வேணாம். சில் தண்ணி கொண்டாங்க... இருங்க, ஐஸ் வாங்கிட்டுவரேன்!” என்று அவன் எதிர்ப்பக்கம் இருந்த கடையில் இருந்து ஐஸ் துண்டுகள் வாங்கி வந்து தடவினான். பிறகு அவனே டாக்டரிடம் தூக்கிச் சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/240&oldid=1050242" இலிருந்து மீள்விக்கப்பட்டது