பக்கம்:உத்தரகாண்டம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246   ✲   உத்தரகாண்டம்


“நீங்க இங்க விட்டுப் போகாதீங்க. கையில் பிடிக்க வேண்டியதை முழுகவிட்டுட்டேன். இப்ப ஒரு துரும்புதா இது. இதைப் புடிச்சிட்டுப் போராடணும். பழசெல்லாம் அழுகல். இருங்க. இங்கேயே இருங்க. நான் வருவேன். அய்யாவின் வழி... வரும் இளம்பயிரைத் தேடிட்டுப்போறேன். நம்புங்க...” என்று சொல்லிவிட்டுப் போய் ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. இவளை ரங்கன் இப்போதெல்லாம் அதிகமாகக் கண்காணிக்கிறான். லாரியில் செங்கல் வந்து பக்கத்தில் அடுக்குகிறார்கள். தை பிறந்து, மா, புதிய மொட்டுகள் குலுங்க நிற்கிறது. அடிபருத்து வாடிய இலைச்சருகுகளும் பூச்சியும் ஒரு பக்கம் இருந்தாலும், நம்பிக்கை உண்டு என்று பூத்திருக்கிறது. அதைப் பார்த்து விட்டு நம்பிக்கை கொள்கிறாள்.

வங்கிக்குச் சென்று செலவுப் பணம் எடுத்துக் கொண்டு வருகையில், காந்திபிறந்த மாநிலத்தில், பூகம்பம் வந்து குஞ்சு குழந்தை நல்லவன் கெட்டவன் என்று பாராமல் பலி கொண்டது போதாதென்று மதக்கலவரம் பற்றி எரியும் செய்திகளை தொலைக்காட்சி, பத்திரிகைத் தலைப்பு என்று கடை விரிக்கின்றன. வெளியில் வரும் போதுதான், அன்றாட, வண்டி சாவு, தீப்பற்றி எரிதல், குத்து வெட்டு கொலை கொள்ளை எல்லாம் உணர்வில் குத்துகின்றன. இப்போது எல்லாம் கேட்டுப்பழகினாற்போல், மரத்துப் போயிருக்கிறது. முன்பெல்லாம், அங்கே அநீதி இங்கே அக்கிரமம் என்று போராட்டங்கள் பற்றிக் கேள்விப் படுவாள். சர்வோதய அமைப்பைச் சேர்ந்தவர்கள், இவளை அழைத்துக் கொண்டு கோட்டை முன் போராட்டத்தில் கலந்து கொள்ள வைத்தனர். “அணுகுண்டு வேண்டாம்; இன்னொரு சண்டை வேண்டாம். மனிதர் ஒற்றுமையுடன் வாழ்வோம்...” என்றெல்லாம் கோசங்கள் வைத்தனர். யார் யாரோ இவளுக்கு முகமறியாத ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், வேலை செய்யும் பெண்கள்... ராமலிங்கம்தான் இவளை வந்து கூட்டிச் சென்றார். அந்த ஏழைத்தாயின் மகனுக்கு நியாயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/248&oldid=1050252" இலிருந்து மீள்விக்கப்பட்டது