பக்கம்:உத்தரகாண்டம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    23

நடந்தது. மருமகன், கப்பலில் போகும் என்ஜினியராக இருந்தார்... ‘சுதந்தர இந்தியாவின் கடற்படையில் வேலை’ என்ற பெருமையுடன் அம்மா சொல்வாள்... பையன் அவள் அதிகார வட்டத்துக்கப்பால் அப்போதே நழுவிவிட்டான். நெடுநேரம் கண்ணாடியின் முன் தலைவாரிக் கொள்வதும் மோவாயில் மீசை அரும்புவதைப் பெருமையுடன் தடவிக் கொள்வதும் வயசுக் கோளாறு என்று பொருட்படுத்தவில்லை. தீபாவளி பொங்கல் என்றால் அய்யாதான் அவர்கள் எல்லோருக்கும் கதர் வேட்டி சேலை சட்டை வாங்கித் தருவார்.

“போம்மா! எனக்கு இந்தச் சட்டையும் அரை டவுசரும் பிடிக்கல. எங்கிட்ட காசு குடு, நான் எனக்குப் புடிச்சதை வாங்கிக்கிறேன்...” இதுதான் முதல் படி. அவன் உயரமாக வளர்ந்த பிறகு வேட்டி, துண்டு சட்டை என்றுதான் வாங்கித் தந்தார். அவன் அவர்கள் முகத்தில் படாமல் நழுவினான்.

அவன் சிகரெட் பீடி குடிப்பதையும், மூச்சுவிடாமல் வசனங்களைப் பேசுவதையும், அவனுக்கென்று ஒரு நண்பர் குழாம் இருப்பதையும் பஞ்சமி புருசன் கந்தசாமிதான் அவ்வப்போது வந்து சொன்னான். பாதி நாட்கள் பள்ளிக்குச் செல்வதில்லை. நாடகம் பார்ப்பது, எழுதுவது, பேசுவது என்று ஈடுபாடு காட்டியதில், ஒன்பதில் தேற வில்லை. அழகரசன் என்று ஒரு பையன் இவனைத் தேடி வருவான். அப்பன் பர்மாவில் இருந்து வந்தவன். இங்கே வந்தபின் கல்யாணம் கட்டி குடும்பமாக இருக்கிறான். தையல் கடை வைத்திருந்தான்.

அவன்தான் கருப்புச் சட்டைக் கட்சி.

அவள் அந்த ராசமணியைத் தேடிச் சென்றாள்.

தேனாம்பேட்டைச் சந்தில் ‘கதிரவன் தையலகம்’ என்று பலகை மாட்டி இருந்தான். ஓட்டுத் திண்ணையில் அவன் மிசின் வைத்துத் தைத்துக் கொண்டிருந்தான். கீழே ஒரு பொடிசு பித்தான் தைத்துக் கொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/25&oldid=1049402" இலிருந்து மீள்விக்கப்பட்டது