பக்கம்:உத்தரகாண்டம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248   ✲   உத்தரகாண்டம்

மாமரத்தின் கிளைகளை வெட்டிச் சாய்த்திருக்கின்றனர். பூவும் இலைகளுமாக ஒட்டக்கழிபட்டு மொட்டையாக நிற்கிறது. ரங்கன் பெரிய கிளையை இழுத்துக் கொண்டிருக்கிறான். அவளுக்குப் பகீரென்கிறது.

பின்பக்கம் செல்லும் போதெல்லாம் சிநேகமாக விசாரிக்கும் மாமரம். அது எத்தனை, காய், கனிகள் கொடுத்திருக்கின்றன? கண்ணமங்கலத்திலிருந்து வந்த சொத்து அது. காய் குடம் குடமாக இருக்கும். பழுத்தால் அப்படி ஒரு இனிப்பு. ஊரிலிருந்து வந்த பழத்தைத் தின்று, கொட்டையை ராதாம்மா குழந்தையாகப் புதைத்துத் துளிர்த்து வளர்ந்து கனி கொடுத்த மரம்.

“ஏம்ப்பா இதை வெட்டுறீங்க? நிறுத்துங்க? ஆயியப்பனை வெட்டுறதுக்குச் சமானம். ஏன் ரங்கா? இப்படி அழிச்சாட்டியம் பண்றே? அது உன்னை என்ன செய்தது?”

“சேர்மன் சார்தான் வெட்ட சொன்னாரு. இது பூச்சி புடிச்சிப் போயி நிக்கிது. வெறும் குப்பை, கிட்ட போக முடியல...”

“அதுக்காவ? உன் ஆயியப்பனுக்கு நோவு வந்தா இப்பிடித்தான் வெட்டுவீங்களா? சேர்மன் சொன்னாராம்? யார்ரா அது சேர்மன், போர்மன்? விட்டுடுங்கையா, உங்கள கையெடுத்துக் கும்புடறேன்!” அவள் அந்தக் கிளைகளின் நடுவே நின்று கையெடுத்துக் கும்பிடுகிறாள்.

“கிழவி, இந்த சென்டிமண்ட், நாடகமெல்லாம் எங்கிட்ட வச்சிக்காத. நா அவுரு ஆளு. அவுரு சம்பளம் குடுக்கிறாரு. இன்னிக்கு மரத்த வெட்டுன்னாரு. நா செய்யிறேன். நீ தடுக்கணும்னா அவருகிட்டப் போயி இதெல்லாம் சொல்லு...”

துயரம் தாளாமல் மண்டுகிறது.

‘மரத்தை வெட்டுற கன்ட்ராக்டர்கள் வந்தால், பொம்புளங்க சுத்தி மரத்தைக் கட்டிப்பாங்க. எங்கள வெட்டிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/250&oldid=1050255" இலிருந்து மீள்விக்கப்பட்டது