பக்கம்:உத்தரகாண்டம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    249

மரத்தை வெட்டுங்கம்பாங்க... அப்படி ஒரு இயக்கம் இருக்கு. அதுல தான் ராதாம்மா புருசன் இருக்கறதாச் சொன்னாங்க...’

“தம்பி! இங்க வாங்க! எங்கேயோ நடக்குற அநியாயம் இல்ல. உங்க வூட்டிலியே நடக்குது.” என்று அழுகிறாள்.

சோறு பொங்கி வைத்துவிட்டுப் போனாள். சோறெடுக்கத் தோன்றவில்லை. இன்று மரத்தை வெட்டுகிறார்கள். நாளைக்கு என்ன நடக்கும்?...

வாசலில் நின்று வெறித்துப் பார்க்கிறாள். வெயில். பார வண்டிகள், கட்டடம் கட்டும் சாதனங்கள் சுமந்து செல்லும் அந்த கிளப்பும் புகை, புழுதி எல்லாம் அவள் இயலாமையை மேலும் கூர்மையாக்குகின்றன. அப்போது தெருவில் செல்லும் பெண் ஒருத்தி, புன்னகையுடன் அவளை நோக்கி, ‘நமஸ்தே’ என்று கைகுவிக்கிறாள். கருத்து, மெலிந்த உடல், கன்னங்கள் பூரித்தாற்போல் முகம் இருந்தாலும், தாடை எலும்புகள் துருத்திக் கொண்டு தெரிகின்றன. அடர்த்தியில்லாத முடி பின் கழுத்தோடு கத்திரிக்கப் பட்டிருக்கிறது. கண்களில் ஒரு நம்பிக்கையொளி. கைத்தறிச் சேலை; வெட்டு, ஃபிட்டிங் இல்லாத ரவிக்கை. நகை நட்டு எதுவும் இல்லை. காதுகளில் சிறு வளையங்கள்.

“நா உள்ள வரட்டுமா?...”

கம்பிக் கதவை நன்றாகத் திறக்கிறாள். “வாம்மா, நீ யாருன்னு எனக்குத் தெரியல. இந்தப் பக்கத்தில பார்த்ததா நினப்பில்ல. புதிசா, அங்கே கிழக்கே நிறைய வீடுகள் கட்டி வந்திருக்காங்க... நீ யாரத் தேடி வர? யாரும்மா?”

இவள் ஆவலும் பரபரப்பும் கட்டுக்கடங்காமல் போகிறது.

“நாங்க மேற்கே, புதிசா இருக்கும் எக்ஸ் ஸர்விஸ் காரங்களுக்கான காலனிக்கு வந்திருக்கிறோம். வந்து ஒரு மாசம் தானாகுது...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/251&oldid=1050260" இலிருந்து மீள்விக்கப்பட்டது