பக்கம்:உத்தரகாண்டம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250   ✲   உத்தரகாண்டம்


“ஓ, அப்ப... உங்க...” என்று கேட்குமுன் இதயம் வலிப்பது போல் இருக்கிறது. கார்கில், அங்கே இங்கே என்று போர் வந்து அன்றாடம் வீரர்களின் உடல்களைச் சுமந்து பெட்டிகள் வந்தன. இந்தக் குழந்தையைப் பார்த்தால் முப்பது வயசு இருக்காது. அதற்குள்...

“இங்க யாரம்மா இருக்காங்க?”

“அம்மா இருக்காங்க. அவங்களுக்கு நடக்க முடியிதில்ல. அதா என்ன அனுப்பிச்சாங்க. வாசல்ல வராந்தா இருக்கும். எதிரே மரமெல்லாம் இருக்கும். சோலையில் நடுவே பெரிய வீடுன்னு சொன்னாங்க. ராம்ஜி மாமா, நா அப்பான்னு கூப்பிடுவேன்னாங்க...”

“கண்ணு? உங்கம்மா பேரு அநுதானே? அநு... அநு... குருகுலத்துல வேலை செய்ய வந்தா. இந்தப் படுபாவி பண்ணின தில்லுமுள்ளுல, குழந்தையத் தூக்கிட்டுப் போயிட்டா. அப்ப, உங்கப்பா உங்கப்பா, ரிடயராகி வந்திட்டாங்களா? நீ... நீ... எப்படிடா, அடயாளம் தெரியாம ஆயிட்ட சிவப்பா, தலைநிறைய சுருட்டை முடியும், ரோஜாப்பூ மாதிரி முகமும் இருப்பே... கறுத்து மெலிஞ்சி... கல்யாணம் ஆயிருக்காம்மா?”

“உம். ரெண்டு குழந்தை இருக்கு...”

“அம்மாடி, அந்த ஆண்டவனே, முருகனே உன்னிய இங்க அனுப்பியிருக்காரு. என்ன செய்யுறதுன்னு திண்டாடிட்டிருந்தேன். உங்கம்மாவ நான் இப்பவே பார்க்கணும். இதே வரேன்...”

“இருங்க தாதிமா, நான் போயி ஒரு ஆட்டோ கூட்டிட்டு வரேன்?”

“ஆட்டோவெல்லாம் எதுக்கு? இந்தப் பக்கம் தானே? நான் நடப்பேன்மா?”

“இல்ல தாதிமா, கொஞ்ச தூரம் போகணும். நீங்க வயசானவங்க.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/252&oldid=1050263" இலிருந்து மீள்விக்கப்பட்டது