பக்கம்:உத்தரகாண்டம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    251


“வயசா? ஏம்மா, நீ வரச்சே, நான் நடப்பேன். அந்தப் பக்கம் தானே போகணும்? அவன் அம்பது நூறும்பான். அடாவடி... அடாடா, உன்னை உள்ளே கூப்பிட்டு ஒரு வாய் தண்ணி கூடக் குடுக்காம. கிளம்புறேன் பாரு” என்று சொல்லி உள்ளே அழைக்கிறாள்.

கூடத்தில் அந்தப் படங்களை அவள் பார்க்கிறாள்.

“ஒ... எனக்கு மங்கலா நினப்பு வருது. இங்கே பெரிய பிரம்பு சோபா... அதில தாத்தா... மடில உக்காத்தி வச்சிப்பாங்க. நான் அவர் கண்ணாடிய எடுத்துத் திறப்பேன்...”

அவள் கண்களில் நீர்மல்க, அந்தக் கன்னங்களை வழித்து, நெற்றியில் பொட்டில் சொடுக்கிக் கொள்கிறாள்.

“கண்ணு, பொழுது உச்சிக்கு வந்து இறங்குது. நீ சாப்பிட்டியோ?...”

“இனிமேத்தான். குழந்தைகள் ஸ்கூல்லேந்து வர ரெண்டு மணியாகும். சப்ஜி பண்ணி சோறு பண்ணி வச்சிருக்கு. காலம ப்ரக்ஃபாஸ்ட் ஆயிருக்கு...”

‘கண்ணு, ஒரு வாய் தயிர் சோறு தாரேன். சாப்பிடுடா...” அவசரமாகப் பொங்கிய சோற்றில் உறை தயிரையும் உப்புக்கல்லையும் போட்டுப் பிசைகிறாள். ஒரு லில்வர் தட்டு இருக்கிறது. பின்னே சென்று இலையறுக்கும் மனம் இல்லை. இப்படியே, இப்படியே கிடைக்கும் இலக்கு...

தட்டில் சோறும், அப்போது போட்ட நார்த்தங்காய் ஊறுகாயும் வைத்துக் கொடுக்கிறாள். பின்புறம் குளியலறையில் அவள் கைகழுவச் செல்கையில் கொல்லையில் மரம் வெட்டுவது தெரிகிறது.

பெஞ்சில் அமர்ந்து கையில் தட்டை வைத்துக் கொண்டு அவள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டே நிற்கிறாள். இளநீல வண்ணச் சேலை. தூய வெண்மை ரவிக்கை. ‘சத்திய தேவதையா?’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/253&oldid=1050267" இலிருந்து மீள்விக்கப்பட்டது