பக்கம்:உத்தரகாண்டம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262   ✲   உத்தரகாண்டம்

எல்லாம் போட்டுக்கணும்” என்று போட்டாள். அப்ப கூட அழுதேன்.

“ராம்ஜி மாமா, நீங்க சொல்லுங்க! இந்த சமயம் என் சந்தோசம் முக்கியமா, அவங்க சந்தோசமா?”

“ரெண்டும்தான். ஒரு நாளைக்குத்தானேம்மா? ‘விட்டுக் கொடு’ன்னார். அந்த முதல் பிரசவம், ஏழு மாசத்திலேயே குழந்தை பிறந்து தங்கல. கிரண் சண்டிகர்ல இருந்தார். இதே வாழ்க்கைதான். “இனி இல்லைம் பாரு. குவார்ட்டர்ஸ். காலைக்கெடுபிடி... ஒரே மாதிரி சூழல், தடித்த லிப்ஸ்டிக், கையில்லாத ரவிக்கை, பளிரென்ற ஆடைகள், கம்பளிப் பின்னல்கள், பார்ட்டி, டின்னர், அது, இது... எல்லாம். உடனே மறுபடி கர்ப்பம். அப்போது மாமா வந்து நாக்பூருக்கு அழைச்சிட்டுப் போனார். அங்கேதான் ஆஸ்பத்திரியில் இவள் பிறந்தாள். ஓடி வந்தார். சந்தோசமாக, குழந்தையைத் தூக்கினார். “அநு, பழைய கிரண் இல்ல. புதியவன், நான் ஒரு தந்தை, நீ அம்மா”ன்னு கண் கசிந்தார், ‘புதியதோர் உலகு செய்வோம், கெட்ட போரிடும் குணமதை வேறொடு சாய்ப்போம்’ன்னு பாடினார். அந்தக் குரலில் மயங்கிப் போனேன். புதிய நம்பிக்கையுடன், குழந்தையையும் எடுத்துக் கொண்டு, பெங்களுருக்குப் போனேன். மாமாவும் மாமியும் கொண்டு விட்டார்கள். இரண்டு மூன்று நாட்கள், புதிய இடத்தில் எதுவும் தெரியல. சண்டைக்காலத்தில், எல்லைப் புறங்களில் ‘டென்ஷன்’ ஆனால் அதெல்லாம் இல்லாத போதுமா?

“மாலை நெருங்கும்போதே எனக்கு டென்ஷன். இரவு வரும் வரையிலும் அது ஏறி வெடிக்குமளவுக்கு வரும். அழுவேன். திட்டுவேன். குழந்தைக்கு ஒன்றரை வயசு முடிந்த சமயம். ஒருநாள் இரவு குடிச்சிட்டு டூவீலர்ல வரப்ப எங்கேயோ மோதி, தலையில இரத்தக்காயம். கட்டோடு வந்தார். நான் எப்படித் துடிச்சிருப்பேன்னு பாத்துக்குங்க! நான் எந்த முடிவும் எடுக்க வேண்டி இருக்கல. அன்னிக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/264&oldid=1050296" இலிருந்து மீள்விக்கப்பட்டது