பக்கம்:உத்தரகாண்டம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    25

அவ்வப்போது காணங் குப்பத்தில் இருந்து வருவான். ரிக்‌ஷா ஓட்டுபவன். குடிகாரன். அவள் புருசனைக் கெடுத்தவனே அவன்தான். “ஏண்டி பொட்டச்சிறுக்கி, முதல்ல பிறந்திட்டா, நீ மகாராணியா? சாண்பிள்ளைன்னாலும் ஆம்புள. அது செத்த நேரம் தூங்கட்டுமே?” என்று அதட்டுவான். இது தாயம்மாளின் செவிகளில் அநேகமாக விழாது. ஏனெனில் அதிகாலையில் எழுந்து அவள் குடிலைச் சுற்றிய இடங்களில் சாணி தெளித்துப் பெருக்குவாள். பத்துப் பசுக்கள் உள்ள கோசாலை இருந்தது. சாணி சுமந்து போட எருக்குழி உண்டு. பால்கறந்து, தயிர், மோர் வேலைகள் இருக்கும். சமையற்கட்டில் அங்கேயே உறையும் மாணவிகளும் ஆசிரியர்களும் வேலை செய்வார்கள். பெரிய கிணறும் இருந்தது. உடலுழைப்பு மிக முக்கியமாகக் கருதப்பட்டது.

ஆனால் அவள் பையன் பிறவியிலேயே யாரேனும் தனக்காக எல்லாம் செய்ய வேண்டும் என்று அடம் பிடித்தான். இந்தி எழுத்துக்களை, பாடங்களை பஞ்சமி எழுதிக் கொடுப்பதும் இவன் கொண்டு போவதுமாக இருந்ததை ஆசிரியர் சுப்பையா கண்டுபிடித்துவிட்டார். பஞ்சமி ஏழிலோ எட்டிலோ படித்துக் கொண்டிருந்தாள். “நீ இரண்டு நாட்களுக்கு, அந்த வகுப்பிலேயே உட்கார்ந்திரு இங்கே வரவேண்டாம்” என்று அவளுக்கு வகுப்பில் நுழைய முடியாதபடி தண்டனை கொடுத்தார். இந்தப் பயலை செமையாக உதைத்து, வகுப்பில் இருந்து அத்தனை பாடங்களையும் எழுத வைத்தார்.

ஆனால் அவனைத் திருத்த முடியவில்லை. காசு எங்கே வைத்தாலும் களவு போயிற்று. அவளுக்கு இவனை அய்யா முன் கொண்டு நிறுத்தத் துணிவு வரவில்லை. அந்தக் கால கட்டத்தில், குடும்பத் தலைவன், இறந்து போன புதிது. அவன் சுதந்தரம் வந்ததும் பெரிதாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை.

“சுதந்தரம் வந்திடிச்சில்ல? அய்யா எப்படியும் மந்திரி ஆயிடுவாரு. தாயம்மா, நீதான் எனக்கு இந்தத் தோட்டக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/27&oldid=1049404" இலிருந்து மீள்விக்கப்பட்டது