பக்கம்:உத்தரகாண்டம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    269


இந்த மண்ணுக்கே தஞ்சம் என்று வந்திருக்கிறார்களா?

சூது வாதறியாத பெண், தீவிரவாதிகளால் பெற்றோரை இழந்த பச்சைக் குழந்தைகளைக் கை நீட்டி அரவணைத்து வளர்க்கும் பெருங்கருணை, இந்தக் ‘கசுமால’ மண்ணில் பிழைத்திருக்குமா? இவர்களுக்கும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி உள்ளே தள்ளி விடாதா?

இரவு முழுவதும் உறக்கம் பிடிக்கவில்லை. மண்டை நரம்புக்குள் பல முரண்கள் பிய்த்துப் பிராண்டுகின்றன. பயங்கள், சோகங்கள், இழப்புகள்... ஏன் இப்படி? மண்ணில் விளையாடியது, அப்பனின் தோள் மீது அமர்ந்து திருவிழா பார்த்து, பரிசலில் ஏறிச் சென்றது, சம்பு அம்மா பிசைந்து ஊட்டிய தயிர்ச்சோறு, மொடமொடவென்ற கதர்ச்சீலையணிந்து, ஒரு துணையைக் கைபிடித்தது, பசுமையான தாலி அளித்த பாதுகாப்பு, முதல் பிரசவத்தின் போது, சரோ அம்மாவின் மாமியார் இவளைப் பிடித்துக் குடிலுக்குள் பிரசவம் பார்த்தது, அந்த முதல் அழுகை...

எல்லாமே இன்பமான பொழுதுகள். மாலையில் அந்தக் குழந்தைகள் கழுத்தைக் கட்டிக் கொண்டது, வாயில் ‘கேக்’ வாங்கிக் கொண்டு, அவளையும் ருசிக்கச் செய்தது, எல்லாமே மனசில் பரமசுகம் அளித்த அநுபவங்கள். ஆனால், ஒரு கையகலத்துணிக்குள் பெண்ணுடம்பின் மானத்தை மறைக்கப் போராடும், அபலையாய், மூர்க்க, வெறியர்களின் சூழலில்... சத்தியங்கள்.

எப்படி? எப்படி?... முருகா! முருகா... முருகா... கண்களை மூடித் தூங்க முயற்சி செய்கிறாள். எல்லாவற்றையும் மறக்க வேண்டும்... காலையில் எழுந்து கோபமோ, ஆத்திரமோ படாமல் வீடு துப்புரவாக்க வேண்டும். முருகா, உன்னைக் கூப்பிடுவதைத் தவிர எனக்கு ஒன்றும் புரியவில்லை.

முருகன் சூரனை ‘சம்ஹாரம்’ செய்யப் பிறப்பெடுத்தார். சம்பு அம்மாவுடனும் கமலியுடனும் சிவன் கோயில் முன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/271&oldid=1050349" இலிருந்து மீள்விக்கப்பட்டது